பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

விழுந்தாள். 'இதென்ன விளையாட்டு, உனக்குத் தெரியாதது இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?’ என்று நான் அவள் தலையில் கொஞ்சம் ஐஸ் வைத்துப் பார்த்தேன். குளிரவில்லை; அப்பொழுதும் அவள் உச்சி குளிரவேயில்லை. 'உங்களைக் கட்டிக்கொண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? பட்டுப் புடைவை இல்லாவிட்டாலும் ஒரு நைலான், நைலெக்ஸ் புடைவையாவது உண்டா? தங்க நகைகள் இல்லாவிட்டாலும் கவரிங் நகைகளாவது உண்டா, உண்டா? கண்ணுக்கு ஒரு கறுப்புக் கண்ணாடி, கைக்கு ஒரு டம்பப் பையாவது உண்டா, உண்டா, உண்டா? ஒரு மண்ணும் இல்லை, இந்த வீட்டில்! அதெல்லாம் இல்லாவிட்டால் போகட்டும்; ஆசைக்கு ஒரு வார்த்தை ‘பவானிக் கண்ணு’ என்று கூப்பிடுங்கள் என்றால், அதற்கும் மனமில்லை உங்களுக்கு! இனி எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்காது. இந்தக் கூரை வீட்டை விட்டுவிட்டு நீங்கள் உடனே ஒரு மாடி வீட்டுக்காவது குடியேற வேண்டும்; உங்களிடமுள்ள ஓட்டை சைக்கிளைத் தூக்கித் துார எறிந்து விட்டு, நீங்கள் உடனே ஒரு ஸ்கூட்டராவது வாங்கித் தொலைக்க வேண்டும். மாலை நேரத்தில்கூட அடுப்படியில் உட்கார்ந்து அழுது வடிய இனி என்னால் முடியாது. இரவுக்கும் சேர்த்து மத்தியானமே சமைத்து வைத்துவிட்டு, மாலை நேரத்தில் நான் உங்களுடன் வெளியே புறப்படத் தயாராயிருப்பேன். நீங்கள் வேலையிலிருந்து வந்ததும் என்னைத் தூக்கி ஸ்கூட்டருக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமாவுக்கோ, பீச்சுக்கோ போகவேண்டும். அங்கே நீங்கள் என்னைக் கிள்ள வேண்டும்; நான் துள்ள வேண்டும். நான் உங்களைக் கடிக்க வேண்டும்; நீங்கள் சிரிக்க வேண்டும்!' என்று என்னவெல்லாமோ பிதற்ற ஆரம்பித்துவிட்டாள். "இதென்ன வம்பு! நிஜமாகவே இவள் நம்மைக் கடித்துவிட்டால், நம்மால் சிரிக்கவா முடியும்?' என்று நான் பயந்துபோய், 'அதெல்லாம் நடக்கும்போது நடக்கிறது; இப்போது நீ எனக்குச் சோற்றைப் போடு!'