பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

269

என்றேன். 'இந்தச் சோற்றைப் போடும் வேலையைக்கூட இனி என்னால் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது. பேசாமல் நீங்கள் ஒரு 'டைனிங் டேபிள்' வாங்கி விடுங்கள். அதில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து சாப்பிடுவோம்!' என்றாள். 'அப்படியே செய்வோம்; அதற்காக நீ கவுன் போட்டுக்கொண்டு பட்லரைத் தேடாமல் இருந்தால் சரி!’ என்றேன் நான். 'இந்த வக்கணையில் ஒன்றும் குறைச்சல் இல்லை!' என்று அவள் தன் முகவாய்க் கட்டையைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டே எனக்குச் சோற்றைப் போட்டாள். சாப்பிட்டு விட்டு வந்தேன். வந்ததிலிருந்து ‘இத்தனை நாளும் இல்லாத ஆசைகளெல்லாம் இன்று ஏன் அவளுக்கு வந்திருக்கின்றன?’ என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன், பார்க்கிறேன், அப்படிப் பார்க்கிறேன்-ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது!'

இப்படியாகத்தானே பாதாளம் சொல்லிக்கொண்டு வந்தவையனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த விக்கிரமாதித்தர் கடைசியாகச் சிரிக்க, ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று பாதாளம் கேட்க, ‘நெருப்பில்லாமல் புகையாது; அதே மாதிரி ஒரு காரணமும் இல்லாமல் உன் மனைவிக்கு இந்த ஆசைகளெல்லாம் பிறந்திருக்காது. நீ சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அவளுடைய பெட்டியை அவளுக்குத் தெரியாமல் திறந்து பார்; அதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்கலாம்!' என்று சொல்வாராயினர்.

அங்ஙனமே அன்று மாலை பாதாளம் வீட்டுக்குச் சென்றதும் அவள் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் திறந்து பார்க்க, அதில் தமிழக அரசின் லாட்டரிச் சீட்டுக்கள் ஏ. பி. சி. டி. ஈ. எப். ஜி. எச். ஆக எட்டுப் பிரிவுகளிலும் வகைக்குப் பத்தாக எண்பது சீட்டுக்கள் இருக்க, ‘அடிப்பாவி! என் சம்பளத்தில் பாதியை இதற்கா அழுதாய்?’ என்று தனக்குள் பொருமிக்கொண்டே அவற்றைக் கொண்டு வந்து