பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

விட்டு வருகிறேனே, அன்னலட்சுமி! இருக்கிற வேலையையெல்லாம் விட்டுவிட்டு நீ ஏன் இன்னொரு தடவை அனாவசியமாக எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' என்று ஒரு முறை கொஞ்சம் நாசூக்காகக்கூடச் சொல்லிப் பார்த்தான்; 'பணத்துக்குத்தான் நான் சொந்தக்காரியில்லை; எண்ணிப் பார்ப்பதற்குக்கூடவா சொந்தக்காரியில்லை?' என்று அவள் உடனே அவன்மேல் கோபித்துக்கொண்டு விட்டாள். அன்றிரவு அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் பாடு 'போதும், போதும்’ என்று ஆகிவிட்டது. ‘இதென்ன வம்பு! இவளுடைய கோபத்துக்கு ஆளாகாமல் இந்த மர்மத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?’ என்று அவன் யோசித்தான், யோசித்தான், அப்படி யோசித்தான்; ஒன்றும் புலப்படவில்லை. கடைசியாக மிஸ்டர் விக்கிரமாதித்தர் என்று யாரோ ஒருவர் ஏதோ காரியமாக அந்த ஆட்டுப் பட்டிக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் யார் எதற்கு வழி கேட்டாலும், அவர் உடனே தக்க வழி கூறி அவர்களைத் தடுத்தாட்கொள்வதாயும் யாரோ சொல்ல, 'அப்படியா சங்கதி?’ என்று ஆண்டியப்பன் அவரைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்.

அவன் குறை கேட்டார் விக்கிரமாதித்தர்; 'கவலை வேண்டாம்; நான் சொல்லுகிறபடி செய்!' என்றார். ‘விளக்கு அணைந்ததும் நீ அவளுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்; 'கண்ணே! வாழைத் தண்டைப் போலக் கைகள், அலேக்! வெண்டைக்காயைப் போல விரல்கள் அலேக்!' இப்படி ஏதாவது சொல்லி, அவள் அம்மா அடுக்களையிலிருந்து விளக்கை கொண்டு வரும்வரை அவளை வர்ணி; அவள் வந்ததும் கைகளை விட்டுவிடு. அப்புறம் பார், அவள் கணக்கும் உன் கணக்கும் சரியாக வருவதை!' என்றார். 'அப்படியே செய்கிறேன்!' என்று அவன் வந்தான்; அவர் சொன்னபடி செய்தான். கணக்கும் சரியாக வந்தது; 'அட, என் ராசா! சினிமாக்காரிபோல