பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

25

நினைத்து டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவான். அதற்கு மேல் அவள் ஏதாவது முணுமுணுத்தாலும் அதை நீ காதில் போட்டுக் கொள்ளாதே! 'ஒவ'ராகப் போனால் அங்கேயே ஐந்து பேரைக் கூட்டி, 'கேளுங்கள் ஸார், இந்த அக்கிரமத்தை?’ என்று அஞ்சாமல் பஞ்சாயத்து வை; அவள் அசந்து விடுவாள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் மெல்ல அவளை நெருங்கி, ‘எப்படி என் ஐடியா?’ என்று கேட்டு இளி; ‘பிரமாதம்’ என்று அவளும் இளிப்பாள். அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது, நீ கேட்கத்தான் என்ன இருக்கிறது? 'புகையிலை பிரித்தால் போச்சு, பெண் பிள்ளை சிரித்தால் போச்சு!” என்றுதான் ஒரு பழமொழியே இருக்கிறதே!’

இப்படியாகத்தானே சிவாஜி மீசை ஒர் அபூர்வமான யோசனையைச் சொல்ல, அதை அப்படியே ஏற்று எம்.ஜி.ஆர். மீசை செய்ய, பத்மாவதியாகப்பட்டவள் வெகுண்டு, 'பிய்த்துவிடுவேன், பிய்த்து!’ என்பது போல் தன் கையிலிருந்த குடையைத் தூக்கிக் காட்டி விட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போவாளாயினள்.

எம்.ஜி.ஆர். மீசை திரும்பி வந்து, நடந்ததை அப்படியே சிவாஜி மீசையிடம் சொல்ல, அது சிரித்து, 'பைத்தியக்காரா, ஒரு பெண் குடையைத் தூக்கிக் காட்டினால் என்ன அர்த்தம் என்று தெரியாதா, உனக்கு? இப்போது மழைக் காலம்; குளிருக்குப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் தோன்றுமே தவிர, கலியாணம் பண்ணிக் கொண்டு சல்லாபமாக இருக்கத் தோன்றாது. ஆகவே, இந்த மழைக் காலம் போகட்டும்; வேனிற் காலத்தில் கலியாணம் பண்ணிக் கொள்ளலாம் என அர்த்தம்' என்று விளக்க, ‘காத்திருப்பேன், காத்திருப்பேன்; வேனிற்காலம் வரும்வரை என் வெண்ணிலா எனை மணக்கக் காத்திருப்பேன்!' என்று இது உற்சாகமாகச் சீட்டியடித்துப் பாடிக் கொண்டே சென்றது.