உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

277

நினைத்த அவன் அடிமேல் அடி வைத்து அவருடைய பெட்டியை நெருங்க, அதுதான் சமயமென்று அவர் திடுக்கிட்டு எழுந்தவர் போல் எழுந்து, 'ஐயோ, பாம்பு!' என்று அவன் வந்ததைக் கவனிக்காதவர்போல் அலற, 'அட சை! முழிச்சிக்கிட்டாண்டா!' என்று அவன் சட்டென்று ‘பாத்ரூ‘முக்குள் ஓடி ஒளிய, அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், 'எங்கே பாம்பு?' என்று கேட்டுக்கொண்டே திரண்டு வந்து அவர் இருந்த பெட்டிக்குள் ‘திபுதிபு'வென்று நுழைய, 'இப்படித்தான் வந்தது, இப்படித்தான் ஓடிற்று!' என்று சொல்லிக் கொண்டே அவரும் கொஞ்ச நேரம் அவர்களுடன் சேர்ந்து பாம்பைத் தேடுபவர்போல தேட, கடைசியில் உதவிக்கு வந்தவர்களில் ஒருவர் அலுத்துப் போய், 'நிஜமாகவே நீர் பாம்பைக் கண்டீரா? அல்லது கனவு கினவு, கண்டீரா?’ என்று கேட்க, 'நிஜமாகத்தான் பாம்பைக் கண்டேன், சுவாமி! உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் ‘பாத்ரூ'முக்குள் ஓர் ஐயா இருக்கிறார்; அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்!' என்று 'பாத்ரூம்' கதவைத் தட்ட, 'அடப் பாவி, என்னைக் காட்டிக் கொடுக்கவா இந்த வேஷம்?’ என்று திருடன் சட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, 'தப்பினோம், பிழைத்தோம்' என்று ஓடப் பார்க்க, எல்லோருமாகச் சேர்ந்து அவனை விரட்டிப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்புவிப்பாராயினர்.”

தினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான பரிமளா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......