278
பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா
சொன்ன
கன்னி ஒருத்தியின் கவலை தீர்ந்த கதை"கேளாய்,போஜனே! 'கிள்ளியூர், கிள்ளியூர்' என்று சொல்லா நின்ற ஊரிலே, 'கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம்’ என்று ஒரு பாக்கம் உண்டு. அந்தப் பாக்கத்திலே பழம் பெருமையோடு புதுப் பெருமையும் வாய்க்கப் பெற்றிருந்த தம்பதியர் இருவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். 'தாரா, தாரா' என்று அவர்களுக்கு ஒரே பெண்; சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்தப் பெண்ணாகப்பட்டவளை அவர்கள் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தகாலை அவள் கன்னிப் பருவத்தை எய்த, அந்தக் கன்னி 'காதல் விபத்து'க்கு உள்ளாவதற்கு முன்னால் அவளுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமே என்று அவளுடைய தாயும் தந்தையும் கவலை கொண்டு, அந்தக் கவலையிலேயே மூழ்கி, அவளுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியில் முனைந்து நிற்பாராயினர்.
அங்ஙனம் முனைந்து நின்றகாலை, 'பணக்காரனுக்குத் தான் என் பெண்ணைக் கொடுப்பேன்!' என்று தாயாராகப் பட்டவள் சொல்ல, ‘முடியாது; படித்தவனுக்குத் தான் கொடுப்பேன்!' என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'அது எப்படிக் கொடுப்பீர்கள், பார்த்துவிடுகிறேன்!' என்று அவள் சூள் கொட்ட, 'அது எப்படிக் கொடுப்பாய், பார்த்து விடுகிறேன்!' என்று அவரும் சூள் கொட்டுவாராயினர்.