பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279


இப்படியாகத்தானே இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தகாலை, 'இந்தப் போட்டியில் யார் யாரை எப்போது வெல்வது, தனக்கு எப்போது கலியாணம் ஆவது?’ என்பதாகத்தானே தாரா 'யோசி, யோசி' என்று யோசிப்பாளாயினள்.

இங்ஙனம் யோசித்துக்கொண்டிருந்தகாலை, ஒரு நாள் மாலை கடற்கரையில் யாரோ ஒரு காளை தன்னை 'ஏதிலார் போலப் பொதுநோக்கு' நோக்குவதைக் கண்ட தாரா, ‘இது ஒரு வேளை காதல் நோக்காயிருக்குமோ?’ என்று ஐயம் கொள்ள, அதுகாலை, 'ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள’ என்ற குறட்பா அவள் நினைவுக்கு வர, 'ஐயமில்லை, இது காதல் நோக்குத்தான்!' என்பதாகத்தானே அந்தக் கன்னி தீர்மானித்து, ‘இப்படி ஏதாவது நடக்காதவரை தன் பெற்றோர் ஒன்றுபட்டுத் தனக்குக் கலியாணம் செய்து வைக்க மாட்டார்கள்!’ என்ற திடீர் முடிவுக்கு வந்தவளாய், ‘யானோக்குங்காலை நிலம் நோக்கும்; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்' என்ற 'வள்ளுவன் வழி'யை வழுவின்றிப் பின்பற்றி, அவளும் அவன் நோக்காதபோது அவனை நோக்கி, நோக்கும்போது நிலம் நோக்கி மெல்ல நகுவாளாயினள்.

கடல் அலைகளோடு தங்கள் ‘காதல் மக'ளை விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து அவள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் பெற்றோர் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து ஓடி, 'என்னம்மா, என்ன?’ என்று பதட்டத்துடன் விசாரிக்க, ‘ஒன்றும் இல்லை, அப்பா! வந்து...வந்து...’ என்று அவள் மென்று விழுங்க, ‘இதென்ன வம்பு?’ என்று நினைத்த அப்பாவாகப்பட்டவர் துணிந்து அந்தக் காளையை நெருங்கி, ‘என்னப்பா, என்ன நடந்தது?’ என்று கேட்க, ‘ஒன்று மில்லை; தன் கையிலிருந்த கார் சாவியை அந்தப் பெண் இங்கே தவற விட்டுவிட்டாள். அதை எடுத்து அவளிடம்