பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

287

ஓசிப் பொடி வாங்கிப் போட்டுத் தும்மி வைக்கிறேன்!' என்று முதலாளி சொல்ல, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாபஸ் வாங்காவிட்டால், இதோ, இப்போதே, இந்தக் கணமே வேலை நிறுத்தம்!' என்று அந்தத் தொழிலாளி தன் 'எவரெடி போர்க்கொடி'யை உயர்த்திப் பிடிக்க, அந்தக் கொடியின் கீழ் எல்லாத் தொழிலாளரும் உடனே திரண்டு, உண்ணாவிரதம், உண்டிக் குலுக்கல் ஆகிய போர் முறைகளைக் கையாள, ஏற்கெனவே பல நெருக்கடிகளுக்கு ஆளாகி, ‘எப்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும், கம்பெனியை இழுத்துப் பூட்டலாம்' என்று காத்திருந்த முதலாளி, இதுதான் சமயமென்று 'கதவடைப்பு' செய்ய, அதைப் பார்த்துவிட்டு, நான் வீட்டுக்குத் திரும்பி வருவேனாயினன். அங்ஙனம் திரும்பி வந்தகாலை வீடு பூட்டியிருக்க ‘எங்கேயாவது அரட்டையடிக்கப் போயிருக்கிறாளோ, என்னவோ?’ என்று நான் வாயிலிலேயே காத்திருப்பேனாயினன். மணி பத்தும் ஆயிற்று, பதினொன்றும் ஆயிற்று, பன்னிரண்டும் ஆயிற்று. அவள் வரவில்லை; வரவே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துப் பார்த்தேன்; 'அவள் எங்கே போனாளோ, நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நல்ல வேளையாக என்னிடம் மாற்றுச் சாவி ஒன்று இருந்தது. அதைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே போனேன். 'கடிதம் ஏதாவது எழுதி வைத்து விட்டுப் போயிருப்பாளோ?' என்று மேஜை, டிராயர் ஆகியவற்றைக் ‘குடை, குடை’ என்று குடைந்து பார்த்தேன்; ஒன்றும் கிடைக்கவில்லை. 'ஒருவேளை தூக்குப் போட்டுக்கொண்டிருப்பாளோ?' என்று ஏணைக் கயிற்றைப் பார்த்தேன்; அதில் ஏணைதான் தொங்கிக் கொண்டிருந்தது; அவள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. ‘கிணற்றில் விழுந்து விட்டிருப்பாளோ?' என்று புழக்கடையில் இருந்த கிணற்றில் குதித்துப் பார்த்தேன். அதில் சேறுதான் இருந்தது; அவள் இல்லை. இப்படியாக எல்லாச் சோதனைகளையும் செய்து முடித்த பிறகு, 'உள்ளே தூக்குப் போட்டுக் கொண்டு,