பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

தீர்த்துக் கட்டும் வரை இவன் அவர்களிடம் சிக்க மாட்டான். பாவம், அவர்களில் ஒருத்தி வீட்டுவேலை செய்து பிழைப்பாள்; இன்னொருத்தி சோற்றுக்கூடை தூக்கிப் பிழைப்பாள்; மற்றொருத்தி இட்லி - மசால் வடை சுட்டு விற்றுப் பிழைப்பாள்; மற்றும் ஒருத்தி மாட்டின் துணை கொண்டு பிழைப்பாள். அவர்களில் யாருக்கும் இவனுக்கு ஒரு மனைவியும் மூன்று துணைகளும் உண்டு என்ற விஷயம் தெரியாது; ஒவ்வொருத்தியும் தான் மட்டுமே இவனுக்கு மனைவி, தான் மட்டுமே இவனுக்குத் துணைவி என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இந்தக் குட்டை உடைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்த நான், ஒரு முதல் தேதி அன்று அவர்கள் நால்வரையும் சேர்ந்தாற்போல் வரச் சொல்லி ஒளித்து வைத்துவிட்டு, இவன் சம்பளம் வாங்கியதும் அவர்களைக் கொண்டுபோய் இவனுக்கு முன்னால் நிறுத்தினேன். அவ்வளவுதான்-அவர்களில் ஒருத்தி இவனுடைய வலது கையைப் பிடித்துக் கொண்டாள்; இன்னொருத்தி இடது கையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றொருத்தி சட்டையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றும் ஒருத்தி வேட்டியைப் பிடித்துக் கொண்டாள். இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடே திண்டாட்டம் என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள்; இந்தக் காலத்தில் நாலு பெண்டாட்டிக்காரன் பாடு எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? பயல் 'விழி, விழி' என்று விழித்தான். ‘இதெல்லாம் உங்கள் வேலைதானா?' என்பதுபோல் என்னை வேறு பரிதாபமாகப் பார்த்தான். நான் சிரித்தேன். அதற்குள், 'இவருக்கென்று நான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி வரலாம்?’ என்று ஒருத்தி இன்னொருத்தியைக் கேட்க, ‘நான் ஒன்றும் வரவில்லை; இவராகத்தான் வந்தார்!' என்று அவள் சொல்ல, ‘இவருடைய சம்பாத்தியத்துக்கு நாங்கள் இரண்டு பேர் போதாதா? நீ ஏன் வரவேண்டும்?' என்று முன்னவள் மூன்றாமவளைக் கேட்க, ‘நான்தான் கதியில்லாமல்