பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

295

வந்தேனென்றால் இவள் ஏன் வந்தாள் என்று கேள்!' என்று அவள் நாலாமவளைச் சுட்டிக் காட்ட, 'இந்த மன்மதனுக்கு ஏற்கெனவே மூன்று ரதிகள் இருக்கிறார்கள் என்பதை நான் கண்டேனா?' என்று அவள் சொல்ல, ‘யாரையடி ரதி என்கிறாய்?' என்று முன்னவள் அவள் மேல் பாய, அவர்கள் இருவரையும் மற்ற இருவர் விலக்கிவிட முயல, அதுதான் சமயமென்று இவன் அவர்களிடமிருந்து தப்பி எடுத்தான் ஓட்டம்! அதற்குப் பின் இவனும் வேலைக்கு வரவில்லை; இவனைத் தேடிக்கொண்டு அவர்களும் கம்பெனிக்கு வரவில்லை!'

விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘அவர்கள் நால்வரும் வேறு எங்கேயும் போய்விடவில்லை; இங்கேயேதான் இருக்கிறார்கள்!' என்று பாதாளம் சொல்ல, 'எங்கே இருக்கிறார்கள்?’ என்று அவர் கேட்க, 'இங்கேதான் இருந்தார்கள்; இப்போது அவனுடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!' என்று இவன் சொல்ல, ‘ஏன்?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அவன் போடும் விபூதிக்கு அவர்கள்தானே மாறி மாறி வந்து பேயாடித் தொலைக்க வேண்டியிருக்கிறது!’ என்று பாதாளம் குட்டை உடைக்க, ‘அடப் பாவி! இப்படி ஒரு பிழைப்பா உனக்கு?’ என்று அங்கே கூடியிருந்த பக்த கோடிகள் அனைவரும் கல்லடி பட்ட தேனீக்கள்போல் கலைந்து செல்வாராயினர்."

ருபத்து மூன்றாவது மாடி ரிஸ்ப்ஷனிஸ்ட்டான அபரஞ்சி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘'நாளைக்கு வாருங்கள்; இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கீழே இறங்கி வருவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...