பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

போனவரை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்க, ‘போங்கப்பா!’ என்று அவள் முகம் சிவக்கச் சொல்ல, ‘அப்போ சரிதான்!' என்று அவர் அக்கணமே துண்டை உதறித் தோளின்மேல் போட்டுக்கொண்டு பொன்னுச்சாமியின் வீட்டைத் தேடிச் செல்வாராயினர்.

அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், 'ஐயோ, போலீஸ்காரனைத் திருடன் பிடித்துக்கொண்டு போகிறானே!' என்று அந்தத் தெருவில் இருந்தவர்கள் அது ஒரு சினிமாக் கதையில் வரும் 'வெளிப்புறக் காட்சி' என்பது தெரியாமல் கூச்சலிட, அதைக் கேட்ட பொன்னி, 'இது என்ன கூத்து!' என்று எண்ணியவளாய் வெளியே வந்து பார்க்க, சற்றுத் தூரத்தில் உண்மையிலேயே அங்கு வந்த போலீஸ்காரரை ஒரு திருடன் பிடித்துக்கொண்டு போவதை அவள் கண்டு, ‘திகை, திகை' என்று திகைப்பாளாயினள்.

‘இப்படியும் ஒரு போலீஸ்காரர் உண்டா?' என்று அவள் மூக்கின்மேல் விரலை வைக்க, அதுகாலை அங்கு வந்த அவள் தகப்பனார், ‘எல்லாம் பேசி முடித்தாச்சு அம்மா, அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணம்!' என்று சொல்ல, ‘அதற்குள்ளாகவா?’ என்று அவள் ஆச்சச்சச்சரியத்துடன் கேட்க, ‘எனக்கே அது ஆச்சச்சரியமாய்த்தான் இருந்தது, அம்மா! அந்தப் பொன்னுச்சாமிக்குத் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை; சித்தப்பாவும் சித்தியும்தான் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால், 'அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்வீர்களோ, காஷாயம் வாங்கிக் கொடுத்துக் காசிக்கு அனுப்புவீர்களோ-அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது!’ என்று சொல்லிவிட்டார்கள். 'இது என்ன, எடுக்கும்போதே அபசகுனமாயிருக்கிறதே!' என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தேன். திண்ணையில் உட்கார்ந்திருந்த பொன்னுச்சாமியின் தாத்தா என்னைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு,