பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கேட்டுவிடலாமா, என்றுகூட அவர் நினைத்தார். 'அப்படிக் கேட்டால் அது மரியாதைக் குறைவாக அல்லவா இருக்கும்? ‘என்னய்யா, இதற்குள் என்னை மறந்துவிட்டீரே!' என்று அவர் சமீபத்தில் நிகழ்ந்த ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவூட்டிச் சிரித்தால் தன் முகத்தில் அசடு அல்லவா வழியும்? வேண்டாம்; இன்று முழுவதும் யோசித்துப் பார்ப்போம்!' என்று அரிக்கும் மனத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டே அவர் பின்னும் மேலே செல்வாராயினர்.

அன்று முழுவதும் மட்டுமல்ல; அதற்கு அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும்கூட அவர் யோசித்துப் பார்த்தார், யோசித்துப் பார்த்தார், அப்படி யோசித்துப் பார்த்தார். ‘அந்தக் கனவான் யார், அவரை எங்கே பார்த்தோம், எப்படி அறிமுகமானோம்?’ என்பது அவருடைய நினைவுக்கு வரவேயில்லை. இதற்கிடையில் அந்தக் கனவானும் அவரைக் கண்டதும் கை குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புச் சிரிப்பதை நிறுத்தவேயில்லை. 'இது என்ன குழப்பம்? இந்தக் குழப்பத்தைத் தெளியவைக்க இவ்வளவு பெரிய உலகத்தில் யாருமே இல்லையா?' என்று அவர் ஒரு நாள் அதிஅதிஅதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தகாலை அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர், ‘என்ன அப்படி யோசிக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவர் விஷயத்தை சொல்ல, 'இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; அவரைப் போய்ப் பார்த்தால் உங்கள் குழப்பத்தை ஒரு நொடியில் தெளிய வைத்துவிடுவாரே!' என்று நண்பர் சொல்ல, 'அதுதான் சரி; ஏற்கெனவே இருக்கிற குழப்பங்களோடு இந்தக் குழப்பத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டிருக்க இனி என்னால் முடியாது!’ என்று அவர் அன்றே போய் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவருடைய குழப்பத்தைக் கேட்டார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; சிரித்தார். 'என்ன, சிரிக்கிறீர்கள்?’ என்றார் இவர்; ‘ஒன்றுமில்லை' என்று சொல்லிக்கொண்டே அவர் தமக்கு