பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

அரைக்கால் சிரிப்பு, அரைச் சிரிப்பு, முக்கால் சிரிப்பு, முழுச் சிரிப்பெல்லாம்கூடச் சிரிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் தெரியாதவர்களை என்ன, தெரிந்தவர்களைக் கண்டாலும் தெரியாதவர்கள்போல் போய்விடுவார்கள். இந்த உண்மையை நீரே தெரிந்துகொண்டு விடுவீர் என்று நினைத்துத்தான் ஒரு வாரம் கழித்து உம்மை நான் வரச் சொன்னேன். இப்போதாவது தெரிந்துகொண்டு விட்டீரா, இல்லையா?’ என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடாவ, ‘தெரிந்துகொண்டு விட்டேன், தெரிந்துகொண்டு விட்டேன்!' என்று தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டே தெய்வசிகாமணி அவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.”

முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நிர்மலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...