பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இந்தப் பெட்டியிலிருந்து ஒர் அழகான பெண் வரப் போகிறாள் பாருங்கள்!' என்று சொல்லிக் கொண்டே சென்று, தன் மனைவி மகுடியின் உதவியுடன் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டத்தினருக்கு நடுவே வைத்தான். காலியாயிருந்த அந்தப் பெட்டியை அவன் எல்லோருக்கும் திறந்து காட்டி, 'நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; சந்தேகமாக இருந்தால் பெட்டிக்கு அருகேகூட வந்து பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று சொல்லிப் பெட்டியை ‘டப்' பென்று மூடி, 'சூ! மந்திரக்காளி, மாயக்காளி! ஓடி வாடி, ஜக்கம்மா!’ என்று தன் கையிலிருந்த ஒரு சிறு கோலால் அந்தப் பெட்டியை ஒரு தட்டுத் தட்ட, அதைத் திறந்து கொண்டு அழகான பெண் ஒருத்தி 'ஜிலுஜிலு' வென்று வெளியே வருவாளாயினள்.

வேடிக்கை பார்க்க வந்திருந்த வாலிபர்கள் மூவரும் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, 'உண்மையிலேயே இவள் பெண்ணாயிருப்பாளோ? அல்லது, மாயமாய் வந்ததுபோல் மாயமாய் மறைந்துவிடுவாளோ?' என்று அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்ணாகப்பட்டவள் கூட்டத்தைச் சுற்றிக் கையேந்தி வருவாளாயினள்.

ஏந்திய கையில் எல்லோரும் ஐந்து பைசா, பத்து பைசா என்று போட, வாலிபர்கள் மூவரும் முறையே ஒரு ரூபா, இரண்டு ரூபா, மூன்று ரூபா என்று போட்டி போட்டுக் கொண்டு போட்டுவிட்டு, அவளுடைய நன்றியை எதிர்பார்த்து நிற்பாராயினர். அவளோ தலைக்கு ஒரு புன்னகையாகத் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு, தன்னுடைய கையில் சேர்ந்த காசை மந்திரவாதியிடம் கொடுத்துவிட்டு நிற்பாளாயினள்.

அதுவரை அவள் மாயமாய் மறையாமலிருந்ததைக் கண்ட வாலிபர்கள் மூவரும், அவள் அந்த மாரப்பனின் பெண்ணாய்த்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்து,