பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வரவேற்க, ‘யார் நீங்கள், ஏற்கெனவே என்னை உங்களுக்குத் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல் அவரை விசாரிக்க, ‘இதற்கு முன் தெரியாது, இப்போதுதான் தெரியும். இவர் ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்’ என்று சொன்னதும் நான் உங்களை இனம் கண்டுகொண்டுவிட்டேன்!' என்ற அவர், ‘என் பெயர் சாலிவாகனன்!' என்று சற்றே கூச்சத்துடன் தன் பெயரைக் கடைசியாகச் சொல்லி நிறுத்த, மிஸ்டர் விக்கிரமாதித்தர் திடுக்கிட்டுத் தம்முடைய கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, சாலிவாகனன் சிரித்து, ‘என் பெயர் சாலிவாகனன் என்று சொன்னதும் உங்களுக்கு அந்தப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை ஞாபகத்துக்கு வந்து விட்டதுபோல் இருக்கிறது! பயப்படாதீர்கள், நானும் அந்தச் சாலிவாகனன் அல்ல; நீங்களும் அந்த விக்கிரமாதித்தன் அல்ல. என்னால் உங்கள் கழுத்து ஏன் துண்டாகப்போகிறது?’ என்று சிரிக்க, ‘யார் கண்டது? அந்த சாலிவாகனனைப் போலவே நீங்களும், 'சூ, மந்திரக்காளி!’ என்றதும் உங்களுடைய யானைப் பொம்மை, குதிரைப் பொம்மை, போர்வீரன் பொம்மைகளெல்லாம் உயிர் பெற்று எழுந்து வந்து என்னை எதிர்க்கலாம்; அவற்றையும் எதிர்க்க முடியாமல், உங்கள் கையாலும் சாக விரும்பாமல் நான் தற்கொலை செய்துகொள்ள ஓடலாம்; அப்போதும் நீங்கள் என்னை விடாமல் துரத்தி, உங்களுடைய சக்கராயுதத்தை மந்திரித்து ஏவி என் கழுத்தை அறுக்கலாம். எதற்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாருங்கள்!' என்று விக்கிரமாதித்தர் மீண்டும் தம் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, 'அது சாலிவாகனன் சகாப்தம்; இது நேரு சகாப்தம். அப்போது ஊருக்கு ஒரு ராசா இருந்தான். .ஒரு ராசா இன்னொரு ராசாவை ஒழித்துக் கட்டி, அவனுடைய ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொள்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாயிருந்தான். இப்போதுதான் நாம் எல்லோருமே ராசாக்களாகிவிட்டோமே! ஒருவரை ஒருவர்