பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘அப்படியானால் நீ செவிடும் இல்லை, ஊமையும் இல்லையா?' என்று அவன் கேட்க, ‘இல்லை, நீங்கள் மூவரும் என்மேல் கொண்ட காதல் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அறிந்துகொள்ளவே நான் அவ்வாறு நடித்தேன்!’ என்று அவள் சொல்ல, 'சரியான சோதனை! அந்தச் சோதனையில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்!' என்று அவன் வியக்க, அவர்கள் இருவருக்கும் அக்கணமே மணம் முடித்து வைத்துவிட்டான் மந்திரவாதியான அந்தத் தந்திரவாதி.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் புத்திசாலி?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'சந்தேக மென்ன, மந்திரவாதிதான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க.... காண்க...

3

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

அகதிகள் கதை

மிஸ்டர் விக்கிரமாதித்தர் மறுபடி முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன மூன்றாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும்கேளும்! 'இரண்டாவது உலக மகா யுத்தம், இரண்டாவது உலக மகா யுத்தம்’ என்று ஒரு பயங்கர யுத்தம் இந்தப் பாரிலே நடந்ததுண்டு. அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்த காலையில் பர்மாவிலிருந்த இந்தியர் பலர் பயந்து போய், இந்த இந்தியா தேசத்தை நாடி அகதிகளாக வந்ததுண்டு, அப்படி வந்தவர்களிலே மூன்று தம்பதியர் ஒரு நாள் இரவு