பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

தன்னுடைய அடியாட்களில் சிலரை ஒரு ஜீப்புடன் அவளுடைய குடிசைக்கு அனுப்பி, தூங்கும்போது அவள் வாயில் துணியை அடைத்து அவளைத் துக்கிக் கொண்டு வந்து விடுமாறு சொல்லி அனுப்ப, அவர்கள் அப்படியே சென்று அவளைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு திரும்ப, சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட அவளுடைய தாயார், 'ஐயோ, என் மகளை யாரோ வந்து தூக்கிக் கொண்டு போகிறார்களே!' என்று கதற, ‘யார் அம்மா, யார்?’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கேட்டுக் கொண்டே வந்து அவளைச் சூழ்ந்து கொள்வாராயினர்.

‘அதுதானே தெரியவில்லை எனக்கு!' என்று அவள் அழுது புலம்ப, 'ஓடுங்கள், ஓடுங்கள்! உடனே போலீசில் புகார் செய்யுங்கள்!' என்றார் அவளைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்.

‘இப்போதே புகார் செய்து வைத்தால்தான் நல்லது; இரண்டு குழந்தைகளுக்குத் தாயாவதற்குள்ளாகவாவது போலீசார் அவளைக் கண்டுபிடிப்பார்கள்!’ என்றார் இன்னொருவர்.

'அவள் தாயாவாளோ, தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ?’ என்றார் மற்றொருவர்.

'தற்கொலை செய்துகொண்டால் அவள் குற்றவாளி; தாயாக்கப்பட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு சென்றவன் குற்றவாளி. அதுதான் சட்டம்; அதுதான் ஒழுங்கு!' என்றார் மற்றும் ஒருவர்.

‘என்ன சட்டமோ, என்ன ஒழுங்கோ? சமயத்தில் எதுவும் கை கொடுப்பதில்லை!' என்றார் ஒர் அனுபவசாலி.

இந்தச் சமயத்தில் அங்கே விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்த வீரனும் தீரனும் சூரனும் 'கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம், அவளைக் காப்பாற்ற!’ என்று அவள் தாயாரைத் தேற்ற, ‘எப்படிக் காப்பாற்றுவீர்கள்?’ என்று