பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

போச்சு!’ என்று சிரிக்க, ‘ஸ், சத்தம் போடாதே! இப்போது இதில் வரும் வரும்படி வேறு எதிலும் வருவதில்லை. மது விலக்கை ரத்துச் செய்து விட்டால் இந்த வரும்படியெல்லாம் அநியாயமாக அரசாங்கத்துக்கல்லவா போகும்? அப்புறம் நீயும் நானும் கஷ்டப்படாமல் நாலு காசைக் கண்ணாலே பார்ப்பது எப்படி? வேண்டுமானால் நீயும் எங்களோடு கூட்டுச் சேர்ந்து கொள். எங்களுக்குக் கிடைக்கும் வரும் படியில் உனக்கும் பங்கு தருகிறோம். என் மனைவி இங்கே வந்து நமக்கு வேண்டிய சாராயத்தைக் காய்ச்சிக் கொடுக்கட்டும்; நாம் இருவரும் அதை வெளியே கொண்டு போய் விற்றுவிட்டு வரலாம்’ என்று சொல்ல, ‘சரி' என்று அவனும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்வானாயினன்.

இப்படியாகத்தானே இவர்கள் மூவரும் கூட்டு வியாபாரம் செய்துகொண்டு வருங் காலையில, ஒரு நாள் இரவு மதுரையாகப்பட்டவன் தன்னுடைய கூட்டாளியான மன்னார்சாமியை அழைத்துக்கொண்டு சாராயப் பையும் கையுமாகப் பதுங்கி பதுங்கி வெளியே செல்ல, சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை மடக்கி என்ன வென்று பார்க்க, குட்டு வெளிப்பட்டு அவர்கள் இருவரும் ஆறு மாதச் சிறைத் தண்டனைக்கு உள்ளாகி கம்பி எண்ணுவாராயினர்.

தனியாக விடப்பட்ட மகிழம்பூ அதற்கு மேல் கள்ளச் சாராயம் காய்ச்சப் பயந்து, வெள்ளரிப் பிஞ்சு, வேர்க்கடலை முதலியவற்றை விற்கும் அங்காடிக் கூடைக்காரியாக மாறி வயிறு வளர்ப்பாளாயினள்.

இவள் இப்படி இருக்குங் காலையில், கள்ளத் தோணியில் இலங்கைக்குச் சென்றிருந்த இவளுடைய அண்ணனான அய்யாமுத்து என்பவன், அங்கே கால் ஊன்ற முடியாமல் இங்கே திரும்பி வர, அவனும் அவன் தங்கை மகிழம்பூவும் சேர்ந்து மறுபடியும் கள்ளச் சாராய வியாபாரத்தில் ஈடுபடுவாராயினர்.