பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

பார்க்கலையா, பட்சி ஜோசியம்!' என்று அவன் ஊர் ஊராகத் தெருத் தெருவாகக் கால் வலிக்கும் வரை சுற்றி வருவான். காலை வலித்தால் ஏதாவது ஒரு மரத்தடியைப் பார்த்து உட்கார்ந்து, கடையை விரித்துவிடுவான்.

அப்படி ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கடை விரித்து உட்கார்ந்து கொண்டிருக்குங் காலையில், அவனிடம் ஜோசியம் பார்க்க வந்த ஒருவன், 'இன்றைய தினசரியைப் பார்த்தீரா?' என்று கேட்க, 'இல்லையே, என்ன விசேஷம்?' என்று ஜோசியம் வினாவ, வந்தவன் சொன்னான்.

‘வடநாட்டில் யாரோ ஒரு சிறுமி இருக்கிறாளாம்; அவள் தன்னுடைய முற் பிறவியைப் பற்றிச் சொல்கிறாளாம். அது உண்மைதானா என்று அவளைப் பெற்றவர்கள் போய்ப் பார்க்க, உண்மையாகவே இருந்ததாம்!'

இதைக் கேட்டதும், 'பார்த்தீரா, பார்த்தீரா? முன் பிறவி பொய், பின் பிறவி பொய், அது பொய், இது பொய் என்றெல்லாம் சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே, அவர்கள் இப்போது என்ன சொல்கிறார்களாம்?' என்று கிளி ஜோசியன் உற்சாகத்துடன் கேட்க, ‘அவர்கள் என்ன சொன்னால் என்ன, உம்முடைய கிளி ஜோசியம் பொய் என்று சொல்லவில்லையே?’ என்று வந்தவன் கேட்க, 'அதையும் பொய் என்று சொல்லித்தான் ஐயா, அவர்கள் என் பிழைப்பைக் கெடுக்கிறார்கள்!' என்று அவன் வயிறெரிந்து சொல்ல, 'கவலைப்படாதீர்! என்னைப் போல் இன்னும் பலர் நீர் சொல்வதை நம்பக் காத்திருக்கும்போது, உமக்கும் உம்முடைய கிளிக்கும் ஒரு குறைவும் வராது. இந்தாரும், காசு! திறந்து விடும், கிளியை; அளந்து விடும் கதையை!’ என்று வந்தவன் மூன்று காசை எடுத்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு, அவன் கூண்டைத் திறந்து கிளியை வெளியே விடுவானாயினன்.

கிளி எடுத்துக்கொடுத்த ஏட்டை மாணிக்கம் ஒசை நயத்தோடு ராகம் போட்டுப் படித்துக் காட்ட, அதிலிருந்து