பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

47

தன்னுடைய இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆக மூன்று காலங்களையும் மூன்றே காசு செலவில் முற்றிலும் தெரிந்துகொண்ட திருப்தியோடு வந்தவன் நடையைக் கட்டுவானாயினன்.

அவன் கொடுத்து விட்டுப் போன மூன்று காசுகளில் முதல் வேளையாக ஒரு காசை எடுத்துப் பீடி வாங்கி, அதை ஒசி நெருப்பில் பற்ற வைத்துக் கொண்டு மாணிக்கம் மீண்டும் வந்து மரத்தடியில் உட்கார, அப்போது, ‘எனக்கும் முக்காலமும் தெரியும்!' என்ற யாரோ சொல்ல, ‘யார் அது?” என்று மாணிக்கம் சுற்றுமுற்றும் பார்க்கலாயினன்.

‘நான்தான்!' என்றது அவனுடைய கிளி.

‘நீயா! முன் பிறவியில் நீ என்னவா யிருந்தாய்?'

‘பூனையாயிருந்தேன்!'

‘பூனையாகவா?'

'ஆமாம்; பூனையாயிருந்து கிடைக்கிற கிளிகளையெல்லாம் பிடித்துத் தின்றுகொண்டே இருந்ததால், இந்தப் பிறவியில் என்னைக் கிளியாய்ப் படைத்து விட்டார், கடவுள்!'

‘நான் என்னவா யிருந்தேன்?'

‘அந்தப் பூனையை வளர்த்த எஜமானாயிருந்தீர்; அதனால் தான் இந்தப் பிறவியில் என்னை வளர்க்கும் எஜமானா யிருக்கிறீர்!'

‘அதிசயமா யிருக்கிறதே, நீ சொல்வது? அப்படியானால் உன்னுடைய எஜமானி இப்போது எங்கே இருக்கிறாள்?' என்று மாணிக்கம் கேட்க, 'இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் துரத்தில் இருக்கிறாள்!’ என்றது கிளி.

‘அவள் பெயர் என்ன? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்?'