பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

55


ப்படியாகத்தானே ஆண் கிளி தன் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘இப்போது சொல்லுங்கள், பெண்களை நம்பலாமோ?' என்று கேட்டு, 'உனக்குத்தான் இந்த மாதிரி கதை சொல்லத் தெரியுமா? எனக்கும் தெரியும்!' என்று பெண் கிளி சொல்ல, 'எங்கே சொல்லு, பார்ப்போம்?’ என்று மரகதம் கேட்க, அது சொன்ன கதையாவது:

‘காந்தி மகானையே 'கண் கண்ட தெய்வம்’ என்று போற்றி வந்த கன்னி ஒருத்தி காவேரிப்பாக்கத்தில் இருந்தாள். அவள் பெயர் கஸ்தூரி. ஒரு தாய்க்கு ஒரு மகளாகப் பிறந்திருந்த அவளுக்கு நிறையச் சொத்து, சுகம் எல்லாம் இருந்தது. அவள் தந்தை பர்மா மாப்பிள்ளை ஒருவனுக்குச் சீரும் சிறப்புமாக அவளைக் கலியாணம் செய்து வைத்து விட்டுக் கண்ணை மூடிவிட்டார். கொஞ்ச நாட்கள் அவன் மாமனார் வீட்டில் இருந்த பின், மனைவியை அழைத்துக் கொண்டு பர்மாவுக்குப் புறப்பட்டான். கப்பல் ஏறுவதற்காகச் சென்னைக்கு வந்த அவர்கள், ஓர் ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்கினார்கள். நகை நட்டுகள் கப்பலில் செல்வது அவ்வளவு நல்லதல்லவென்றும், அவற்றை முதலில் 'இன்ஷ்யூர்' செய்து பர்மாவுக்கு அனுப்பிவிட்டால், அங்கே போய் நாம் வாங்கிக் கொள்ளலாமென்றும் அவன் சொல்ல, அதை நம்பி அவள் தான் அணிந்திருந்த நகை நட்டுக்களையெல்லாம் கழற்றி அவனிடம் கொடுக்க, அவற்றை வாங்கிக் கொண்டு வெளியே போன அந்தப் புண்ணியவான் திரும்பவே யில்லை. அவள் அவனுக்காக ஒரு நாள் காத்திருந்தாள்; இரண்டு நாள் காத்திருந்தாள்; மூன்று நாட்களும் காத்திருந்தாள். அவன் வரவில்லை; வரவே இல்லை. அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்தபோது, ‘பர்மா கப்பல் போய் இரண்டு நாட்களாகிவிட்டதே?' என்று சொல்ல, அதற்கு மேல் சென்னையில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று அவள் காவேரிப்பாக்கத்துக்கு வருவாளாயினள்.