பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

57

தன் வீட்டில் சொல்லவில்லை என்று எழுதியிருந்த கடிதந்தான் அது. அதை வைத்துக் கொண்டு இன்னொரு முறை அவளை ஏமாற்றலாம் என்ற நோக்கத்துடன் அவன் மீண்டும் காவேரிப்பாக்கத்துக்கு வந்தான். போலீசாரையும், போலீஸ் ஸ்டேஷனையும் அதுவரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததாக அவள் தாயிடம் அவன் கதை கதையாக அளந்தான். ‘அது கிடைக்கும்போது கிடைக்கிறது; அதற்காக நீங்கள் ஏன் அப்படி அலைந்தீர்கள்?’ என்று அவள் மறுபடியும் தன் பெண்ணுக்குப் போட வேண்டிய நகை நட்டுக்களையெல்லாம் போட்டு, அவனுடன் அவளைக் கூட்டி அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்வாளாயினள்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, மறுநாள் காலை இருவரும் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தது. அதற்கு முதல் நாள் இரவு அவளுடன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த அவன், 'இம்முறை இவளைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல; இங்கேயே ஏமாற்றிவிட்டுச் செல்வதுதான் நல்லது!’ என்று துணிந்து, கொஞ்சம் பாக்குத் தூளை எடுத்து அவள் வாயில் போட்டுவிட்டுச் சிரித்தான்; பதிலுக்கு அவளும் கொஞ்சம் பாக்குத் துளை எடுத்து அவன் வாயில் போட்டுவிட்டுச் சிரித்தாள். இவன் இரண்டு வெற்றிலைகளை எடுத்து, அவற்றில் சுண்ணாம்போடு கொஞ்சம் அபினையும் கலந்து மடித்து அவள் வாயில் திணித்தான்; பதிலுக்கு அவளும் இரண்டு வெற்றிலைகளை எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்து அவன் வாயில் திணித்தாள்.

இப்படியாகத்தானே இவர்கள் இன்பலாகிரியில் மிதந்தவாறு தாம்பூலம் தரித்து முடிக்க, அபினின் லாகிரியில் மயங்கி அவள் அப்படியே அவன்மேல் சாய, அதுதான் சமயமென்று அவள்மேல் இருந்த நகை நட்டுக்களை யெல்லாம் கழற்றிக் கொண்டு அவன் மெதுவாக அங்கிருந்து நழுவி, அன்றிரவே சென்னைக்கு விட்டான் சவாரி!