பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

63


‘திருட்டுப் பயல்! அந்த வேலைக்காரி விசாலத்தை சினிமாக் கொட்டகைக்கு வெளியே இன்றிரவு தனக்காகக் காத்திருக்கும்படி இவன் அவளிடம் சொல்லியனுப்பியிருப்பது எனக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்! ம், நடக்கட்டும், நடக்கட்டும்!' என்று பொருமிய காதர், ‘எஜமான் இன்று கொஞ்சம் 'ஓவ'ராகத் 'தண்ணி' போட்டிருக்கிறாராம். என்ன ஆகப்போகிறதோ, என்னவோ? அரே, அல்லா!’ என்று தன் நாற்காலியில் உட்கார்ந்து குல்லாயைக் கழற்றி மடியின் மேல் வைத்துக் கொண்டு, தலையை இரு கையாலும் 'சொறி, சொறி' என்று சொறிந்து கொள்வானாயினன்.

அப்போது ‘தொப்’ என்ற சத்தம் காதில் விழ, காதர் சட்டென்று குல்லாயை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க, பங்களாவின் பின்புறத்து மதிற் சுவரைத் தாண்டி உள்ளே குதித்த கரிய உருவம் ஒன்று, கையில் உருவிய கத்தியுடன் மாடிப்படி இருக்கும் வராந்தாவை நோக்கி மெல்ல முன்னேறிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, 'வரவே வந்தானே, இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலாவது வந்திருக்கக் கூடாதா? சமையற்காரன் சினிமாவுக்குப் போன பிறகுதானா இவன் வந்து சேர வேண்டும்? இப்போது நான் என்ன செய்வேன்? வாசலைப் பார்ப்பேனா, வராந்தாவைப் பார்ப்பேனா? வராந்தாவை விட்டால் அந்தப் பயல் மேலே ஏறி விடுவான்போல் இருக்கிறது; வாசலை விட்டால் யாராவது உள்ளே நுழைந்து விடுவார்கள் போல் இருக்கிறது! என்ன செய்யலாம்? யோசிக்கக்கூட நேரம் இல்லையே! கையில் உருவிய கத்தியுடன் செல்லும் இவனுடைய நோக்கம் என்னவாயிருக்கும்? திருடுவதாயிருக்குமா, அல்லது மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் எஜமானைக் குத்திக் கொல்வதாயிருக்குமா? ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நான் இங்கே காவற்காரனாயிருந்து என்ன பிரயோசனம்?' என்று பலவாறாக நினைத்தபின் துணிந்து, ‘வந்தது வரட்டும்' என்று