பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அவன் காதோடு காதாகச் சொல்ல, 'காரியவாதிக்குக் கண்டதெல்லாம் காசுதானே?' என்று கலியாணராமன் ஒரு 'புதுமொழி'யை உதிர்க்க, அதைக் கேட்டு அவன் அப்படியே அசந்து போய் நிற்பானாயினன்.

இப்படியாகத்தானே இவர்களுடைய 'பெயர் மாற்றும் படலம்' நடந்து முடிய, ஒரு நாள் கலியாணராமனாகப் பட்டவன் மணவழகனை நோக்கி, ‘எனக்கு ஓர் உபகாரம் செய்வாயா?' என வினவ, 'என்ன உபகாரம்?' என மணவழகன் கேட்பானாயினன்.

‘கோயமுத்துாரில் ஒரு குட்டி மில் முதலாளி இருக்கிறாராம். அவருக்கு ஒரே ஒரு பெண்ணாம். பெயர் பொற்கொடியாம். அவளுக்காக அவளுடைய மாமா ஆனந்த மூர்த்தி இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார். அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஜாதகம் பார்த்தார்; அதுவும் பொருந்தி விட்டது. பெண்ணை உங்களுக்குப் பிடித்துவிட்டால் கலியாணம் உடனே வைத்துக்கொண்டு விடலாம் என்றார். தாய் தந்தையற்ற எனக்கோ ஓர் அனாதை போல் சென்று அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது; கொஞ்சம் யோசித்தேன். அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு விட்ட அவர், 'நீங்கள் எதற்கும் யோசிக்க வேண்டாம். கையில் ரொக்கமாக இருபத்தையாயிரம் கொடுத்துவிடுகிறோம். இன்னும் ஓர் இருபத்தையாயிரத்துக்கு நகை நட்டுக்கள் போடுகிறோம். இவை தவிர, சீர் வரிசைகள் வேண்டிய மட்டும் செய்கிறோம். கலியாணத்தைக் கோயமுத்தூரிலேயே வைத்துக் கொண்டு விடலாம். நீங்கள் விரும்பினால் இங்கே பார்க்கும் வேலையைக்கூட ராஜீனாமா செய்துவிட்டு, அங்கே உள்ள எங்கள் மில்லுக்கு மானேஜராக வந்துவிடலாம்' என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போனார். அதற்கு மேல் அந்த இடத்தை விடக்கூடாது என்று நினைத்த நான், அவரிடம் ஒரு பொய் செரன்னேன். ‘எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார்.