பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

71

இருந்த ஜன்னலுக்கருகே நின்றுகொண்டிருந்த கலியாணராமன் அவனைப் பார்த்து ‘ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரிக்க; 'மோசம் போனேன் கலியாணராமா, உன்னை நம்பி நான் மோசம் போனேன், கலியாணராமா!’ என்று மணவழகன் ‘ஒப்பாரி' வைப்பானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, 'மோசம் போனது யார்? கலியாணராமனா, மணவழகனா?' என விக்கிரமாதித்தரைக் கேட்க, 'பொற்கொடி காக்கா வலிக்காரியாக இல்லாமலிருந்தால் மோசம் போனவன் கலியாணராமன்; இல்லாவிட்டால் மணவழகன்!’ என ‘விளக்கெண்ணெய் முறை'யில் விக்கிரமாதித்தர் விளக்கம் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க.....

9

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

சதிபதி கதை

றுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஒன்பதாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ஓர் ஊரில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். அந்தச் சதிபதிகள் இருவரும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள்; சேர்ந்தே வருவார்கள். அவ்வாறு போகுங் காலையில் கணவனாகப்பட்டவன் முன்னால் செல்வதும், மனைவியாகப்பட்டவள் அவனுக்குப் பின்னால் செல்வதும் அவர்களிடையே வழக்கமாக இருந்து வந்தது.