பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இப்படியாகத்தானே இருந்து வந்த வழக்கம், 'மாதர் முன்னேற்றச் சங்க'த்தில் சேர்ந்ததன் காரணமாக மனைவிக்குப் பிடிக்காமற்போக, ஒரு நாள் அவள் சற்றுத் தூரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பூனைகளைத் தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்தப் பூனைகளைப் பார்த்தீர்களா?’ என்று கேட்க, 'பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று கணவன் கேட்பானாயினன்.

‘பெண் பூனை முன்னால் செல்ல, ஆண் பூனை அதற்குப் பின்னால் செல்லவில்லையா?' என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா?' என அவன் மேலே நடப்பானாயினன்.

சிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த இரண்டு நாய்களைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த நாய்களைப் பார்த்தீர்களா?’ என்று மனைவியாகப் பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.

‘பெண் நாய் முன்னால் ஓட, ஆண் நாய் அதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கவில்லையா?' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா?' என அவன் மேலே நடப்பானாயினன்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் போய்க்கொண்டிருந்த இரண்டு ஆடுகளைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த ஆடுகளைப் பார்த்தீர்களா?’ என்று அவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?' என்று அவன் கேட்பானாயினன்.

‘கிடேரி முன்னால் போக, கடா அதைத் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கவில்லையா?' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா?' என அவன் மேலே நடப்பானாயினன்.