பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஆண்களை அந்த நாளிலேயே பெண்களுக்கு முன்னால் போகவிட்டார்கள் போலிருக்கிறது!’ என்று கருதிக் கொண்டே திரும்பி வர, அவளைக் கண்டதும், 'அவள்தான் உங்கள் மனைவியா? அது தெரியாமல் போச்சே, எனக்கு! நான் வரேன்!' என்று மாஜி காதலியாகப்பட்டவள் நழுவ, அதற்குள் ‘யார் அவள்?’ என்று கண் சிவக்கக் கேட்டுக் கொண்டே அவன் மனைவியாகப்பட்டவள் அங்கே வர, 'அவளும் உன்னைப்போல் ஒரு பெண்தான்டி, நீ போ!’ என்று கணவனாகப்பட்டவன் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடக்க, 'அதெல்லாம் முடியாது! என்னதான் இருந்தாலும் மனுஷனுக்கு இருக்கிற புத்தி வேறே, மிருகத்துக்கு இருக்கிற புத்தி வேறே என்கிறதுதான் இப்போது எனக்கு ரொம்ப நல்லாத் தெரிந்து போச்சே! நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வந்து தொலைகிறேன்!’ என்று ‘மாதர் சங்க'த்தை மறந்து, ‘முன்னேற்ற'த்தையும் மறந்து, பழையபடி அவனை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவள் அவனுக்குப் பின்னால் நடப்பாளாயினள்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘யாரை யார் நம்ப வேண்டும்?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'கணவனை மனைவி நம்ப வேண்டும்; மனைவியைக் கணவனும் நம்ப வேண்டும். இருவரும் ஒருவரை யொருவர் நம்பாமல் வாழ்வதும் ஒன்றுதான்; வாழாமல் இருப்பதும் ஒன்றுதான்!' என்று விக்கிரமாதித்தர் 'விளக்கெண்ணெய் முறை'யைக் கைவிட்டு 'வெட்டு ஒன்று, துண்டு இரண்டு' என்று சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு......