பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

77

‘ஜல், ஜல் என்ற சதங்கை ஒலி எங்கிருந்தோ வந்து அவர்கள் காதில் விழ, 'எஜமானே, நாம் கும்பிட்ட தெய்வம் நல்ல தெய்வம். அதோ, ஒரு கூண்டு வண்டி வருவதுபோல் இருக்கிறது. அந்த வண்டியிலே எஜமானுக்கு வேண்டியது ஏதாவது இருந்தால் நாங்கள் அத்தனை பேரும் அப்படியே மறைந்து விடுகிறோம். எஜமான் தாகத்தைத் தீர்த்துக் கொண்டபின் குரல் கொடுக்கட்டும்; வருகிறோம்!' என அவர்களில் இன்னொருவன் பணிவன்புடன் சொல்ல, 'சரி, வரட்டும்' எனக் காடுவெட்டி அந்த வண்டியை எதிர் நோக்கிக் காத்திருப்பானாயினன்.

வண்டி வந்தது; அதில் அவன் எதிர்பார்த்தபடி ஒரு பெண்ணும் இருந்தது. பெண் என்றால் சாதாரணப் பெண் அல்ல; கலியானப் பெண். சர்வலங்காரதாரியாக இருந்த அவளைக் கண்டதும், நல்ல வெய்யிலில் வெள்ளரிப் பிஞ்சைக் கண்டதுபோல் இருந்தது அவனுக்கு; அப்படியே ‘நறுக், நறுக்'கென்று கடித்துத் தின்றுவிடலாமா என்று நினைப்பவன் போல் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே அவன் அவளை நெருங்கிய காலையில், அவளுடன் இருந்த மூதாட்டிகளில் சிலர் அவனைக் கண்டதும், 'ஐயோ, திருடன்! ஐயோ, திருடன்!' என்று அலற, ‘ஸ், அப்படிச் சொல்லாதீர்கள்; 'தர்மராசா 'என்று சொல்லுங்கள்!' என அவனை அறிந்த ஒரு பெரியவர் 'அடக்க ஒடுக்கத்துடன் சொல்லிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி, 'ஏழைக் கலியாணம், தர்மராசா! பொழுது விடிந்ததும் முகூர்த்தம்; அதற்குத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறோம். நீங்களும் கடவுளைப்போலக் கண்ணுக்கு மறைவாகவாவது எங்களோடு வந்திருந்து கலியாணத்தை நடத்தி வைக்க வேண்டும்!' எனக் கைகூப்பி வேண்ட, ‘ஆஹா! அதற்கென்ன, அமர்க்களமாக நடத்தி வைக்கிறேன்!' என்ற காடுவெட்டி, 'ஆனால் ஒன்று...’ என்று மேலே ஏதோ சொல்லத் தயங்குவானாயினன்.