பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

79

வேண்டியது பொன் அல்ல; பெண் பெரியவரே, பெண்!' என அந்தத் 'தர்மராசா'வாகப்பட்டவன் தனக்கென்று இருந்த அந்தப்புரத்துக்கு அவளைக் கொண்டு செல்வானாயினன்.

இந்த விதமாகத்தானே தன் அந்தப்புரத்துக்கு வந்த காடுவெட்டி, கலியாணப் பெண்ணை இறக்கிக் கீழே விட்டு விட்டு, 'பெண்ணே, உன் பெயர் என்ன?’ என்று கேட்க, ‘கண்மணி!' என்று அவள் தன் கண் இமைகள் படபடக்கச் சொல்ல, அந்த அழகிலே சொக்கிப்போன அவன், ‘ஆஹா, இன்றுபோல் என்றும் உன்னுடன் இருக்க என் தொழிலைக் கூட நான் விட்டுவிடலாம் போல் இருக்கிறதே!' என்று அவளை அப்படியே சேர்த்து அணைக்கப் போக, ‘நில்லுங்கள்!' என்று அவள் அவனைத் தடுப்பாளாயினள்.

‘நின்றேன்!' என்றான் காடுவெட்டி; ‘கேளுங்கள்!' என்றாள் கண்மணி.

'கேட்டேன்!' என்றான் காடுவெட்டி; 'சொன்னேன்' என்றாள் கண்மணி.

என்ன சொன்னாள்? 'எதற்கும் ஒரு முறை உண்டு அல்லவா?' என்று சொன்னாள்.

‘உண்டு!' என்றான் அவன்.

‘திருடுவதாயிருந்தால்கூட சமய சந்தர்ப்பம் பார்த்துத்தான் திருட வேண்டும், இல்லையா?'

'ஆமாம்!'

‘ஒரு பெண்ணின் கன்னித் தன்மை கழிவதற்கு முன்னால் அவள் தன் கற்பை இழக்கக் கூடாதல்லவா?'

‘இழக்கக் கூடாது!’

‘கலியாணமாகாமல் ஒரு பெண்ணின் கன்னித் தன்மை கழியாதல்லவா?'

‘கழியாது!’