பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘அப்படியானால் இன்று என்னைப் போகவிடுங்கள்; நாளைக் காலை நான் கலியாணத்தைச் செய்து கொண்டு என் கன்னித் தன்மையையும் கழித்துக் கொண்டு மாலை இங்கே வருகிறேன்!' எனக் கண்மணியாகப்பட்டவள் சொல்ல, 'நிச்சயம் வருவாயா?' எனக் காடுவெட்டியாகப்பட்டவன் கேட்க, 'நிச்சயம் வருவேன்!' என அவளாகப்பட்டவள் சொல்ல, 'சத்தியமாக வருவாயா?' என அவனாகப்பட்டவன் பின்னும் கேட்க, ‘சத்தியமாக வருவேன்!’ என அவளாகப்பட்டவள் பின்னும் சொல்ல, 'சரி, இன்று போய் நாளை வா!’ என ஸ்ரீ ராமபிரானாகப்பட்டவர், ராவணனாகப்பட்டவனுக்குப் போர்க்களத்தில் சொல்லி அனுப்பியது போல் காடுவெட்டியாகப்பட்டவன் கண்மணியாகப் பட்டவளுக்குச் சொல்லியனுப்புவானாயினன்.

இப்படியாகத்தானே கண்மணியாகப்பட்டவள் அந்தக் கள்ளனிடமிருந்து விடுபட்டு வர, மூக்கைச் சிந்திக் கொண்டிருந்த மூதாட்டிகளும், தலையில் கையை வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் அவளைக் கண்டதும் 'விருட்’ டென்று எழுந்து நின்று அவளை மேலுங் கீழுமாகப் பார்க்க, ‘சந்தேகப்படாதீர்கள்; போனது போனபடியேதான் திரும்பி வந்திருக்கிறேன்!' என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, ‘எனக்குத் தெரியுமே, அந்தத் தர்மராசா எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டாரே! என்று பெரியவர் மறுபடியும் எல்லோரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்ப, 'அப்படிப்பட்ட தர்மராசா இந்தக் கொல்லிமலைக் காட்டிலே வந்து ஒளிந்துகொண்டு ஏன் கொள்ளையடிக்க வேண்டுமாம்?' என்று மூதாட்டிகளில் ஒருத்தி கேட்க, 'தெரியாமல்தான்!' என்று பெரியவர் சொல்ல, ‘என்ன தெரியாமல்தான்?' என்று மூதாட்டி ஒன்றும் புரியாமல் கேட்க, ‘சட்டரீதியாகக் கொள்ளையடிக்கச் சிலருக்குத் தெரிகிறது; அவர்கள் நாட்டிலே இருந்துகொண்டு தங்கள் தொழிலை நாகரிகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாதவர்கள் காட்டிலே இருந்துகொண்டு தங்கள்