பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


12

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

நஞ்சுண்டகண்டன் கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பன்னிரண்டாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! நகரத்துக்குப் புதியவர்கள் யாராவது வந்து, 'எந்தத் தெரு எங்கே இருக்கிறது?’ என்று வழி கேட்டால்கூடத் தெரிந்தாலும் தெரியாதென்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டுப் போகும் எத்தனையோ புண்ணியவான்கள் இந்த நாட்டிலே இல்லையா? அந்தப் புண்ணியவான்களிலே ஒருவனாகத்தான் நம்பியும் முதன் முதலில் இருந்து வந்தான். அப்படி இருந்து வந்தவன், திடீரென்று ஒரு நாள், 'நானும் சேவை செய்யப் போகிறேன்!' என்று கிளம்ப, 'எதற்கு, யாருக்கு?’ என்று அவன் நண்பன் நஞ்சுண்டகண்டன் திடுக்கிட்டுக் கேட்க, 'தமிழுக்கு, தமிழனுக்கு!' என்பதாகத் தானே அவன் மார் தட்டிச் சொல்ல, 'செய்யப்பா, செய்! அதுதான் இப்போது எல்லாத் தொழிலையும்விட லாபகரமான தொழிலாயிருக்கிறது!' என்பதாகத்தானே இவன் அவனை ‘ஊக்கு, ஊக்கு' என்ற ஊக்குவிக்க, 'தொழில் என்று சொல்லாதே; தொண்டு என்று சொல்!' என்று அவன், தான் புதிதாகக் கற்றத் தூய தமிழில் சொல்லிக் குறுக்கிட, 'அந்தத் தொழில் ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாதப்பா!’ என்று இவன் ஒரு கைக்கு இரு கைகளாக விரித்து வைப்பானாயினன்.

‘கிடக்கிறான்!’ என அத்துடன் அவனை விட்டுவிட்டு, நம்பியாகப்பட்டவன் எங்கேயோ அவசர அவசரமாகச் செல்ல, 'எங்கே போகிறாய்?' என நஞ்சுண்டகண்டன்