பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

91

தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்து அரளிக் கொட்டையை அரைத்துத் தண்ணிரில் கலக்கிக் குடிக்கப் போக, அதுகாலை அவள் குழந்தைகளில் ஒன்று, ‘அம்மா!’ என்று அவளை அழைத்துக் கொண்டே வந்து அவளுடைய கால்களைக் கட்டிப் பிடிக்க, அவள் தன் கையிலிருந்த குவளையைக் கீழே வைத்துவிட்டு, ‘என் கண்ணே! என்று அதைத் தூக்கி அணைத்துக்கொள்ள, உள்ளமுருகும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே வந்த நஞ்சுண்டகண்டன் விஷயத்தை ஒருவாறு புரிந்துகொண்டு, அவள் கீழே வைத்த அரளிக் கொட்டைத் திரவத்தை எடுத்துச் சட்டென்று குடித்துவிட்டு, 'பழிக்கு அஞ்சிச் சாக வேண்டியவள் நீ அல்ல; நான்தான். ஏனெனில், எனக்குப் பின்னால் எனக்காக அழ இந்த உலகத்தில் யாரும் கிடையாது; உனக்காக அழ உன்னுடைய குழந்தைகள் இருக்கின்றன. அவற்றைக் காப்பாற்று; உன் கடைசி மூச்சு உள்ளவரை காப்பாற்று!' என்று சொல்லிக் கொண்டே மயங்கிக் கீழே விழுந்து கண்ணை மூட, 'ஐயோ, அண்ணா! உங்களுக்காக நான் அழுவேன்; என் காலமெல்லாம் அழுவேன்!’ என்று அவன்மேல் விழுந்து அவள் புரண்டு புரண்டு அழுவாளாயினள்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பழிக்கு அஞ்சி சாக வேண்டியது அவளா, அவனா?' என விக்கிரமாதித்தரைக் கேட்க, 'இருவரும் அல்ல; ஒரு பாவமும் அறியாத அவர்களைப் பழிக்கு உள்ளாக்கிய சமூகம்தான்!' என விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க...