பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கோவில் ஒவ்வொன்றிலும் சங்கரருக்கு விக்கிரகம் இருக்கக் காணலாம்.

சங்கரருக்கு என்று ஒர் ஆலயம் உள்ளது. அங்கே சங்கரருக்கு வெண்கலச் சிலை இருக்கக் காணலாம். யோகாசனத்தில் அமர்ந்து சின்முத்திரையும் அபயகரமும் கொண்டு விளங்குகிருர் சங்கரர்.

சிருங்கேரி நகரின் மத்தியிலே ஒரு சிறு குன்றின் மீது உள்ளது மலகணிகேஸ்வரர் ஆலயம். ரிஷ்ய சிருங்கரின் தந்தையாகிய விபந்தகர் பூத உடலுடன் மறைந்த இடத்தில் கர்ப்பக்கிரகம் உள்ளது. விஜயநகர சிற்ப ரீதியில் அமைந்துள்ள கோயில் இது. 1621ம் ஆண்டில் இந்தக் கோயில் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. வேணுகோபாலர், சண்முகர், ராமர், துர்க்கை காளிங்க நடனம், கிருஷ்ணர், அநுமான், வீரபத்திரர், நரசிம்மம், சந்திரன் ஆகியோருக்கு பிம்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலிலே கவனிக்கத்தக்கது எது என்றால் ஸ்ரீ அபிநவ நரசிம்ம பாரதிஸ்வாமி (1599-1622) வரைந்த கணபதி உருவம்தான்.

சிருங்கேரியின் மிகச் சிறந்த கோவில் எது என்றால் வித்யா சங்கரர் ஆலயமே. விஜயநகர சாம்ராஜ்யத்தின் தொடக்க நாளிலே (1338) இந்த ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விஜயநகர, ஹோய்சாலா முறையில் இருக்கிறது இந்த ஆலயம். துங்கை நதியின் தென் கரையிலே ஸ்ரீ சக்ர வடிவில் கம்பீரமாக அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்திலே வித்யா சங்கரர் தவிர இன்னும் ஐவருக்கு சந்நதிகள் உள்ளன.