பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மீரா கட்டுரைகள் & 129 என். எஸ்.கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்ததாலோ என்னவோ நல்லதம்பியில் சிந்தனையும் சிரிப்பும் கலந்த உரையாடல்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. நாடு விடுதலை பெற்ற நேரம் என்பதாலோ என்னவோ சுதந்திர இந்தியாவுக்குத் தேவையான சமீன் ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மது விலக்கு, சமதர்மம் ஆகிய கருத்துக்களே முக்கிய இடம் பெற்றிருந்தன. சுருக்கச் சொன்னால் நல்லதம்பியில் காந்திய வாசனை கமகமத்தது. அண்ணாவுக்குப் பெரிதும் புகழ்தேடித் தந்த திரைப் படம் வேலைக்காரி. இளங்கோவனின் கண்ணகி க்குப் பிறகு தமிழ்த்திரை உலகில் ஒரு திருப்பத்தை வசனப் புரட்சியை ஏற்படுத்திய பெருமை வேலைக்காரிக்கு உண்டு. சுவரொட்டிகளில் இயக்குநர் தயாரிப்பாளர், பெயர்களைச் அச்சிட்ட திரைப்பட உலகம், கதை வசன கர்த்தா பெயரையும் சேர்த்து அச்சிடத் தொடங்கியதும், பாட்டுப் புத்தகங்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருந்த திரைப்பட உலகம் கதை வசனப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியதும் வேலைக்காரிக்குப் பிறகுதான். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் மேடையேறிய பிறகே வேலைக்காரி திரைப்படமாகியது. நாடகத்தை அப்படியே படம் எடுத்தால் வெற்றிகரமாய் அமையாது என்பதை வேலைக்காரி"யின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி அண்ணாவிடம் கூறினாராம். அதற்குப் பிறகு அண்ணா திரைப்படத்துக்காக மாறுதல்கள் பலசெய்து உரையாடல் எழுதினாராம். ஆறு இரவுகளில் 1500 பக்கங்கள் எழுதி முடித்தாராம். அதை அப்படியே படமாக்கியிருந்தால் எத்தனை மணி நேரம் ஒடுமோ? டி.எஸ்.எலியட் எழுதிய The Waste Land என்ற மிகமிக நீண்ட கவிதையை அமெரிக்கக் கவிஞர் எஸ்ரா பவுண்டு படித்துப் பார்த்துவிட்டு பல இடங்களை நீக்கியிருக்கிறார். வெட்டி எறிந்திருக்கிறார். எஸ்ரா பவுண்டின் கைப்பட்ட அந்தக் கவிதை பின்னால் நோபல் பரிசு பெற்றது. அதேபோல் 1500 பக்க வசனங்களில் படத்திற்குப் பொருத்தமான தேவையான பகுதிகளைத் தவிர பிற பகுதிகளை இயக்குநர் வெட்டி எறிந்துவிடலாம் என்று அண்ணாவே அனுமதி அளித்திருந்தாராம். இயக்குநருக்கு அண்ணா அளித்த உரிமை, வேலைக்காரிக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.