பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மீரா கட்டுரைகள் ❖ 21

மக்கள், ஆங்கிலம் என்னும் மனைவியின் உறவு கிடைத்ததால் தாய் வார்த்தையைத் தட்டிக் கழிப்பதா? ஆங்கில ஏடுகளில் பயிற்று மொழிக் கொள்கை பற்றி தினமும் வெளியிடப்பெறும் கடிதங்கள் நடுநிலையாக இல்லை; அதாவது Medium ஆக இல்லை. ஒருதீவிர கருத்து சார்பாக இருக்கின்றன.

இது மாதிரி ஆங்கில ஏடுகளில் கடிதம் எழுதுகிறவர்கள் பெரும்பாலும் எப்பேர்ப்பட்டவர்கள் என்று அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எல்லாம் அப்பனாக அமெரிக்காவில் நியூஹாய் (சிகாகோவைச் சேர்ந்தவர்) என்பவர் ஒரே ஆண்டில் 1400 கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் பி.எச்.டி பட்டம் பெறுவதற்காக இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கண்டறிந்த உண்மை."ஆங்கில ஏடுகளின், ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவோர் பெரும்பாலும் மற்ற பொது மக்களைவிட 1. வயதானவர்கள்; 2. பணக்காரர்கள்; 3. மிகுந்த பழமை விரும்பிகள்; சுருங்கச் சொன்னால் பத்தாம் பசலிகள்" என்பதாகும். இந்தச் செய்தி தமிழ்ப் பயிற்று மொழி எதிர்ப்புக் கடிதங்கள் வெளியிடும் இந்து நாளேட்டில் (26 - 12 - 70) வெளிவந்தது.

ஆங்கில நாளேடுகள்தான் சுயநலம் சுயரூபம் காட்டுகிறது என்றால் தமிழ் வாசகர்களால் வளர்ந்துள்ள "தினமணி"யும் எதிர்ப்புக் கடிதங்களை விரும்பி வெளியிடுவது ஏன் என்று தெரியவில்லை.

28-12-70 அன்று தினமணியில் வெளிவந்த கடிதங்களுள் ஒன்றே ஒன்றுதான் தமிழ்ப் பயிற்று மொழி ஆதரவுக் கடிதம். அதுவும் மூவர் சேர்ந்து எழுதியதாலோ அல்லது தினமணி ஆசிரியருக்கு ஆராதனை இருந்ததாலோ என்னவோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தை வரைந்த மூவரும் திரு. ஏ.என். சிவராமனை அவரது ஆயுதத்தைக் கொண்டே மடக்கி யுள்ளனர். அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம், நிலவுக்கு அப்போலோ பயணம். "ஐயா, அப்போலோ பயணத்தையே தமிழில் தங்களால் கட்டுரையாகத் தரமுடிந்தது என்றால் தமிழில் ஏன் விஞ்ஞானக் கருத்துக்களை எழுத முடியாது" என்ற முறையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி ஆசிரியரால் ஏதேதோ சொல்லி மழுப்பத்தான் முடிந்திருக்கிறது. மறுக்க முடியவில்லை.