பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 31 கற்புள்ள பெண்ணுக்கு அழகு என்று அதற்குத் தகுந்த முடிவைத் தந்திருப்பார். அவரோ துறவி. குடும்பஸ்தனின், ஆடவராதிக்க மனோபாவத்தை தம்மால் அனுபவபூர்வமாக உணரக்கூடாதவர். எனவே, அவர் துறவியானதால் ஒரு நீதிபதிபோல, ஆடவர் நேர்மைக்குப் புறம்பான செயலுக்கு கண்டனம் மட்டுமே தெரிவித்தால் ஆடவர் சமூகம் திருந்திவிடாது, தண்டனையே வழங்கவேண்டும் எனும் முடிவிற்கு வருகிறார். கோவலனைக் கண்டித்தால் மட்டும் போதாது, மதுரையில் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே இடமில்லாமற் செய்வேன் என்ற முடிவிற்கு வருகிறார். தவறு செய்த காவலனை எப்படிக் கண்ணகி மன்னிக்கத் தயாராயில்லையோ, அதே வேகத்தில்தான் தவறு செய்த அவள் கணவன் கோவலனை இளங்கோவடிகள் மன்னிக்கத் தயாரா யில்லை. இதன் பின்னணியை புகார் சென்று கண்டறிய வேண்டும். உடமைவர்க்கத்தின் ஒரு கூறாகிய வணிகர் புகாரில் உற்பத்திப் பண்டங்கள் வந்து குவிந்ததனால் வாணிபத்தால் கொழுத்தனர். செல்வம் குவிந்த ரோமாபுரியில் களியாட்டங்கள் பெருகியதுபோல, வணிகரின் செல்வச் செழிப்பு களியாட்டத் திசையில் திரும்பியது. ஆடல் மகளிர் எண்ணிக்கை மிகுந்தது. வணிகப் பண்டங்களைப் போலவே, பெண்கள் போகப் பொருளாயினர். பெண்களுக்கு மட்டும் கற்பைக் கதைக்கிற இந்து சமயஞ் சார்ந்தவரல்லர், இளங்கோவடிகள். பெண்ணுக்கு உரிமையளிக்கும் சமண சமயஞ் சார்ந்தவர். இளங்கோவடிகள் இவ்வாறு சிந்தித்திருப்பாரா என்று எண்ணுவோர்க்கு ஒரு செய்தி. புறநானுற்றில் ஐந்து பாட்டுக்களில் (143-147) வையாவிக்கோப் பெரும்பேகன் எனும் குறுநிலத் தலைவனால் கைவிடப்பட்ட கண்ணகி பற்றிய செய்திகள் வருகின்றன. இவ்வாறான செய்திகளோடு தொடர்புடைய கதையை இளங்கோவடிகள் பயன்படுத்திக்கொண்டிருக்கக்கூடும் என்பதை வையாபுரிப் பிள்ளை கோடிட்டுக் காட்டுகிறார். ஆக, கணவனால் கைவிடப்பட்ட புறநானூற்றுப் பாடல் - கண்ணகி இளங்கோவை ஈர்த்திருக்கிறாள். அவளுக்கு ஆடவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனால் இழைக்கப்பட்ட அநீதியையும் மனத்தில் இருத்திக் காப்பியம் படைக்கும்போது, தவறு செய்கிற ஆடவர் சமுதாயத்தைத் தண்டித்தல் தர்மம் என்றே இளங்கோவடிகள் எண்ணியிருக்க வேண்டும்.