பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா நான் தொட்டிலினை ஆட்டியவாறிங்கிருக்க சும்மா அழலாமா, சோலைப் பசுங்கிளியே? மின்னற் கொடியே! சூல் மேக முதல்மழையே! சின்னக் குரல்நோகச் சித்திரமே, ஏனழுதாய்? அன்பால் உலகத்தை ஆளப் பிறந்தவனே! பண்பால் வளர்ந்த பழங்குடியில் தோன்றிய உன் தாய்ப்பால் குறைந்ததனால் தஞ்சைப் பசுவிடத்தில் போய்ப்பால் கறந்து புதுச்சங்கிற் போட்டளிக்க அப்பால் கசக்குமென அன்பே, அழுதாயோ? முப்பால் விரும்பி முறையிட் டழுதாயோ? வெம்புலியை வென்று விளையாட வந்தவனே? அம்புலியைக் கேட்டே அடம்கொண்ட முதாயோ? பாண்டிப் பெருவேந்தர் பட்டத்து யானையினை வேண்டித் திருவிளக்கே, விம்மி அழுதாயோ? சோழக் குலமன்னர் கொற்றக் குடை நாடி வாழைப் பசுங்கன்றே, வாடி அழுதாயோ? சேரர் மரபுதித்த செம்மல் கரம்பிடித்த வீரத் திருவாள் விரும்பி அழுதாயோ? வாய்வயிற்றைக் காப்பதற்கே வாழும் மனிதரிடைத் தாய்மொழியைக் காப்பதற்கும் தன்மானம் காப்பதற்கும் நல்லவர்கள் தீக்குளித்து நாடாண்ட நந்திவர்மப் பல்லவனாய் மாறியதைப் பார்த்தே அழுதாயோ? என்ன நினைத்தழுதாய்? என்னிடத்தில் சொல்கண்ணே! என்ன விரும்பிடினும் எப்படியும் நான்கொடுப்பேன்! கூடல் நகரெனினும் வாங்கிக் கொடுப்பேனே! தேடக் கிடைக்காத் திரவியமே, கண்வளராய்! அம்மான் மகளான அவ்-அம்மான் குட்டியினைப் பெம்மான் உனக்குமணம் பேசிடுவேன் கண்வளராய்! 'அறுவடை' ராகவிதைகள் UI} 61