பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்செய்த நன்மையினால் கண்டேன்! என்றன் காதென்ன தீமைசெய்ததுவோ, நல்லாள் பண்மொழியை ஒருசிறிதும் கேட்க வில்லை! பஞ்சணைத்தோள் தாங்கிக்கை சுவைக்க வில்லை! வெண்மதிய வதனத்தை வருடிப் பார்க்க விரல்களுக்கும் கொடுத்துவைக்க வில்லை ஒடும் தண்ணீர்மீன் போல் இருந்த என்னை இன்று தவிக்கவிட்டுப் போய்விட்டாள் தரைமீன் போல! ஒருநாளும் தவறாமல் இச்சோ லைக்கே ஒடோடி வருகின்றேன்! தேடித் தேடி உருமாறி வருகின்றேன்! கடலைக் கண்ணில் உண்டாக்கி வருகின்றேன்! ஏதோ ஏதோ புரியாத உணர்ச்சிவழி பாட்டிற் கென்னைப் பூவாக்கி வருகின்றேன்! என்றோ ஒர்நாள் வருவாள் - என்றேநம்பி தினமும் இங்கே வருகின்றேன்! இன்னும்நான் வாழு கின்றேன்! நாளைக்கும் வண்டுவரும்; முல்லைப் பூவின் நறுந்தேனை அருந்திப்பின் ஆட்டம் போடும்! நாளைக்கும் பரிதிவரும்; கமலப் பூவின் நாணத்தைக் கதிர்க்கையால் நீக்கிக் கொஞ்சும்! நாளைக்கும் நிலவுவரும்; அல்லிப் பூவை நள்ளிரவில் கிள்ளிவிட்டுக் குறும்பு செய்யும்! நாளைக்கும் நான்வருவேன்! நாளைக் கேனும் நங்கைவர மாட்டாளா? வரமாட் டாளா? 'தமிழ்நாடு' 1962 99 0 மீரா கவிதைகள்