பக்கம்:முகவரிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனடோல் பிரான்ஸின் நோபல் பரிசு பெற்ற நாவல் 'தாசியும் தபசியும்' . பாவச் சகதியில் புரண்டு கொண்டிருந்த தாசி தாயிலைக் கரை சேர்க்க முயன்று வீழ்ந்துவிட்டதுறவி (பாப்னூடியஸ்) ஒருவரின் கதை அது. தாயிலைத் 'திருத்தப் போகிறேன்' என்று புறப்படும் பாப்னூடியலைப் பார்த்து இன்னொரு துறவி புத்தி சொல்கிறார்... 'தரைக்குப் போகும் மீனின் கதிதான் ஆசிரமத்தை விட்டுப் போகும் உனக்கு நேரும்' என்று தடுக்கிறார்... முடியவில்லை. விரைவில் தாயிஸ், பாப்னூடியஸை ஆட்கொண்டு விடுகிறாள்.

   'தாயிஸ்! நான் உன் கூந்தலை அலங்கரிக்கும் மலராக
    இருக்கக்கூடாதா? உன்னுடைய அழகிய உடலை மூடியிருக்கும்
    உடையாக இருக்கக்கூடாதா? சிங்காரக் கால்களில்
    அணிந்திருக்கும் செருப்பாக வாவது இருக்கக்கூடாதா? என்னை
    உன் காலடியில் போட்டுக்கொள். எனது உடலை உடையாகப்
    போர்த்திக்கொள்... வாகண்ணே! என் வீட்டுக்கு வா!'

என்று அந்த தேவதேவியிடம் விப்ரநாராயணராக வீழ்கிறார். தாசியைக் கைதுக்கிவிடப் போய் புதை சேற்றில் அங்குலம் அங்குலமாக மூழ்குகிறார். பாவம் தபசி!

சிற்பியின் 'அவன்' அந்தத் தபசியைப்போல் ஆரவாரமாகப் புறப்படவில்லை; அடி சறுக்கி விழவும் இல்லை.

'அவள்' மீது அவனுக்கு இரக்கத்தைக் காட்டிலும் 'சூரியனைப்போல் சுத்தமான' காதல் இருக்கிறது. 'ஒழுக்க வாதங்கள், அடுத்த மனிதரின் அலட்சிய ஏளனங்கள்' பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையில்லை. உண்மை யில் அவள் அவனுக்குத் தேவை. அவன் வெளிப்படையாகப் பேசுகிறான்.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/100&oldid=969625" இலிருந்து மீள்விக்கப்பட்டது