பக்கம்:முகவரிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இவையே ‘மரங்கள்’ தொடர்பாகக் கில்மர் தீட்டும் சித்திரங்கள் மரம் ஒரு மனிதப் பிறவியோடு (human being) ஒப்பிடப்படுகிறது. கவிதை முழுவதும் அமைந்த அடிப்படை ஒப்புமை (fundamental comparison) இதுதான். (இதைத் தவிர வேறு எதுவும் ஒப்பிடப்படவும் இல்லை) இந்த ஒப்பீடு முழுமையாக - முன்பின் பொருத்தமாக இல்லாமல் கவிதை சிதைகிறது; படிமம் கலைகிறது. முதலில் பூமித்தாயிடம் பால் குடிக்கும் குழந்தையாகவும் அடுத்து இலைக்கரங்களால் ஆண்டவனை வழிபடும் அடியவனாகவும் பின்னர் தலையில் தங்கவில்லை (குருவிக்கூடு) அணிந்த ஒரு மங்கையாகவும் இறுதியாக இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு புனிதமான கிறித்துவத் துறவுப் பெண்(nun)ணாகவும் ஒரே மரம் உருவகப் படுத்தப்படும்போது குழப்பம் ஏற்படுகிறது. மனித உடலும் யானைத் தலையுமாக உள்ள உருவம் போல் நாலாவிதமான இந்தக் கலவை நம்மை மயங்க வைக்கிறது. ஏதேனும் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அந்த ஒன்றின் ஒவ்வோர் அம்சத்தையும் நுட்பமாகக் காட்டியிருந்தால் இக்கவிதை இன்னும் சிறந்து விளங்கியிருக்கலாம்.

இங்கே அபியின் நீலாம்பரியைப் பாருங்கள். அது படிமத்தின் சூக்குமத்தை நன்றாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடு. கவிதையின் பிற்பகுதி உறக்கத்தின் பின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது. முற்பகுதியோ உறக்கத்தை ஒரு பறவையாக உருவகப்படுத்துகிறது. இந்த உருவகம் மூளியாக இல்லாமல் முழுமை பெற்று விளங்குகிறது:

'பகல் வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/15&oldid=988482" இலிருந்து மீள்விக்கப்பட்டது