பக்கம்:முகவரிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞரின் கவிஞர் கிப்ரான். அவர் மதவாதிகளின் கொள்ளிக் கண்களுக்கு ஆளானதையும் ஆசார முட்கள் அவர் பாதங்களைக் குத்திக் கிழித்ததையும் வேதனையோடு வெளிப்படுத்துகிறார் அபி:

'நீ நிற்கும் சிலுவையின்
நிழலில் கூட
ஆணிகள்'

ஏசுவுக்குக்கூட மேனியில் மட்டும்தான் ஆணி அடித்தார்கள். கிப்ரானுக்கோ அவர் நிழல்மீதுகூட ஆணி அறையும் அளவுக்கு ஆத்திரம் அடைகிறார்கள். இவர்களுக்காக ஏன் பாடவேண்டும்? எனவேதான்

"உன் வேர்களை அரிக்கும்
பூமியை நோக்கி
உன் விழுதுகளை
ஏன் அனுப்புகிறாய்?"

என்று கேட்கிறார் அபி.

பார்மகள் மடியில் பலபாறை அடுக்குகளுக்கு அடியில் உறைந்திருக்கும் பாசில்கள் (fossils) போல் அபியின் கவிதைகளில் படிந்துள்ள அடுக்கடுக்கான கற்பனைகளுக்கு அடியில் உள்ளார்ந்த மனிதாபிமானம் இருக்கக் காணலாம். தான் சிறகுகள் முறிந்து மழையாய்க் கண்ணீர் சிந்த நேர்ந்தபோதும் நசுக்கப்படுவோர் கண்ணீரை இடிகளாய் மாற்றிய கிப்ரானைப் போலவே தான் இனந்தெரியாத சோகச்சுழலுள் சிக்கி இருந்தாலுங்கூட ஏழைஎளியோரைக் கரைசேர்க்கும் உன்னதமான எண்ணங்கொண்டவர் அபி.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/18&oldid=968471" இலிருந்து மீள்விக்கப்பட்டது