பக்கம்:முகவரிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில வரிகளில் சில வார்த்தைகளில் நான் மயங்கி நிற்கும் கணங்களும் அதிர்ச்சியுற்று நினைவுகளை அலைய விட்டுக் காத்திருக்கும் வினாடிகளும் அதிகம்.


    என் சோகம் என் கண்ணீர்
    எனக்கே சொந்தம்


என்று முன்பொரு நாளில் எழுதியதை எண்ணிப்பார்க்கிறேன்.

இப்போது உங்கள் சோகத்துக்கு முன்னால் என் சோகம் எம்மாத்திரம் என்று தோன்றுகிறது.

பாலைக்கும் பாலைவனத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரிகிறது.

உள்ளத்தில் படும் காயத்துக்கும் ஆன்மாவில் படும் காயத்துக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரிகிறது.


    ஆன்மாவில் காயம்பட்டுவிட்ட
    அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்


என்று உங்கள் குரல் வேதனையில் நடுங்கும்போதும் ஒடுங்கும்போதும் யார் என்ன சமாதானம் சொல்ல முடியும்?


'ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று எந்த மரணத்துக்கும் வாசிக்கப்படும் வாய்பாட்டை எப்படி உங்கள் மனைவியின் மறைவுக்கும் ஒப்பிக்க முடியும்?

நிலைத்த நெடும் பாலைவனம் (Deserts of vast eternity) என்று மரணத்தைப் பற்றி மார்வெல் தீட்டிய ஓர் உயிர்த்துடிப்புள்ள சொற்சித்திரம் நினைவுக்கு வருகிறது.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/31&oldid=970853" இலிருந்து மீள்விக்கப்பட்டது