பக்கம்:முகவரிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அவர்களைச் சரியாக அடையாளம் காட்ட முடிந்தது. சொத்துக்காக மனித உறவுகளை ஏலம் போடும் அவர்களின் இழிந்த பண்பை எள்ளி நகைக்க முடிந்தது. அவர்களை மையமாக வைத்து அங்கதம் (Satire) எனப்படும் கூர்மையான கிண்டலையும் நகைச்சுவையையும் கையாண்டு ருசிய இலக்கியத்தில் புதிய பாணியை உருவாக்க முடிந்தது.

1840க்குப் பிறகு ருசியாவில் தொழிற்புரட்சி வேகமாகப் பரவியது. அதன் விளைவாகப் பண்ணையடிமை முறை ஒழிந்து, முதலாளித்துவம் தோன்றியது. ருசிய சமூகத்திலும் தனிநபர்களது மனோபாவங்களிலும் இதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஷெட்ரின்தம் எழுத்துக்களில் பிரதி பலித்தார். ருசிய மக்களோடு ஒன்றிக் கலந்து, அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தை எதார்த்த முறையில், கலையழகோடு வர்ணித்தார். பழமைக்கும் புதுமைக்கும் இடையே உருவான சிக்கல்களை ஆராய்ந்தார். எனவேதான் கார்க்கி 'ஷெட்ரின் உதவியில்லாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ருசியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டார். ஷெட்ரின் பண்ணையடிமை முறைக்கும் சார் சக்கரவர்த்தியின் கொடுங்கோன்மைக்கும் எதிராகக் கிளர்ந்து எழுதினார். அவரது எழுத்து ருசிய மக்களிடம் உறைந்து போயிருந்த அச்சத்தை அகற்றி அவர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டியது. போராடும் மக்களுக்கு அது வீர வாளாக உதவியது.

"அவருடைய ஒவ்வொரு புத்தகமும் அந்தப் பழைய மாளிகையின் ஒரு பகுதியை உடைத்து நொறுக்கியது... அவருடைய பலமான தாக்குதலை எதுவும் தாங்க முடியவில்லை" என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார்.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/37&oldid=968493" இலிருந்து மீள்விக்கப்பட்டது