பக்கம்:முகவரிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஷெட்ரின் எழுத்துக்களுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கைக் கண்டு அரசாங்கம் ஆத்திரமடைந்தது. எட்டு ஆண்டுகள் அவரை நாடு கடத்தியது. எனினும் ஷெட்ரின் தளர்ந்துவிடவில்லை; தைரியமாக முன்னேறினார். கார்க்கி சொல்வதுபோல் "ஷெட்ரின் வாழ்க்கையை விட்டு இம்மிகூட விலகவில்லை. அதன் முகத்தை உற்றுப் பார்த்தார். எல்லாவற்றையும் பார்த்துச் சிரித்தார். அது கசப்பான சிரிப்பு: ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்ட சிரிப்பு."

கல்கி 'ஹாம்லெட்' நாடகம் பற்றி எழுதும்போது அதை இயற்றிய சேக்ஸ்பியரைக் 'குட்டி எமன்' என்று வருணித்தார். எமனிடம் அகப்பட்டுக் கொண்டு ஒருவேளை தப்பினாலும் தப்பலாம். சேக்ஸ்பியரின் நாடகத்தில் அகப்பட்டுக் கொண்ட எந்தக் கதாபாத்திரமும் தப்பமுடியாது, என்றும் நயமாகக் குறிப்பிட்டார். உண்மை தான். 'ஹாம்லெட் 'நாடகம் முழுவதும் கொலையும் தற்கொலையும்தான்; நாடகமேடை முழுவதும் ஒரே பிணவாடைதான்.

கல்கி, சேக்ஸ்பியருக்குச் சூட்டிய பட்டப் பெயர் ஷெட்ரினுக்கும் பொருந்தும். கொலோவா குடும்பத்தைப் பற்றிய இந்த நாவல் முடியும்போது ஷெட்ரின் யாரையும் விட்டு வைக்கவில்லை. அரினாவின் மூத்த மகன் ஸ்டெப்பான் சாவில் தொடங்கும் கதை, அந்தக் குடும்பமே சுடுகாடான பிறகுதான் முடிகிறது. நாவலின் கடைசி அத்தியாயத்தில் தனிமை இருளில் தங்களைப் புதைத்துகொண்டிருப்பவர்கள் வஞ்சகன் போர்பிரியும் சிறைப்பறவை அன்னின்காவும் தான் - மாமனும் மருமகளும்தான்.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/38&oldid=968494" இலிருந்து மீள்விக்கப்பட்டது