உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதற்கடலுக்குள் கைகோத்து நிற்கும்போது ஆனந்தம்; துணையைப் பிரியும்போதோ அச்சம். கடற்கரையில் நின்றால்கூட கால்களே காணாமற் போய்விடுவதைப் போன்ற ஒரு பிரமை.

'ஒரு தடவை கடற்கரையில்
கால் பதித்துப் பார்த்து நின்றேன்
ஒரு அலை பதித்துப்போன
காலைக் கழுவிக் கொண்டு போனது
மீண்டும் கால் பதித்துப் பார்க்க
எனக்கு ஆசைதான்
ஆனால் அப்போது எனக்குக்
கால்களே இருக்கவில்லை'

கால்கள் மட்டுமல்ல, உலகமே இல்லை என்றாகி விடுகிறது. இயற்கையே செயற்கையாகிவிடுகிறது. எல்லாம் சூன்யமாகிவிடுகிறது. ஒவ்வொரு இரவும் காதலன் அழுகைக்காகவே வருகிறது. புதைப்பதும் எரிப்பதுமே கண்ணுக்குத் தெரிகிறது. தற்கொலையும் கொலையுமே தத்துவமாகிறது. குருட்டுப் பிச்சைக்காரன் கைத்தடியை அசையவிட்டுப் போவதைப் பார்த்து 'அடப்பாவி இந்த வாழ்க்கையை இவன் எவ்வளவு கொடுரமாக நேசித்துத் தொலைக்கிறான்' என்று ஏளனம் செய்யத் தோன்றுகிறது. தேனான உயிரை விட்டுச் சாவதாமோ என்ற கவி வாக்கு பொய்யாய்த் தென்படுகிறது.

உலகம் எவ்வளவு பெரிது. அந்த உலகத்தில் ஒரு தனிமனிதன்... அவனது உள்ளம்... அல்லது ஆன்மா உலகத்தைக் காட்டிலும் பெரிதா... பெருமையுடையதா..? இந்தக் கேள்விகளுக்குக் கவிஞரிடமிருந்து எதிரான பதிலே வரக்கூடும்.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/46&oldid=968505" இலிருந்து மீள்விக்கப்பட்டது