பக்கம்:முகவரிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகப் பெரிய அகராதிகள் எல்லாம் தனி மனிதர்களால் உருவானவை அல்ல. பல்கலைக்கழகமோ அரசாங்கம் நியமித்த அறிஞர் குழுவோதான் அகராதிகளை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு அகராதியை உருவாக்குவதில் ஈடுபட்டது, ஓர் அறிஞர் குழு. அக்குழு 40 அறிஞர்கள் கொண்டது. அந்தப் பணியை முடிக்க அதற்கு 59 ஆண்டுகள் (1635-1694) ஆனது; 51,000 சொற்கள் கொண்ட அகராதி உருவானது.

கைம்மாறு கருதாது, தம்மை வருத்திக் கொண்டு, இத்தகைய சாதனையை முதலில் நிகழ்த்திக் காட்டியவர் ஆங்கில மொழிக்கு அகராதி தந்த டாக்டர் சாமுவேல் ஜான்சன். இத்தனைக்கும் அவர் பல்கலைக்கழகத்துப் படிக்கட்டை மிதித்ததோடு சரி, பட்டதாரி ஆனவர் அல்லர். சேக்ஸ்பியருக்கு அறிமுகம், (Preface to Shakespeare) கவிஞர்களின் வாழ்க்கை (Lives of the Poets) முதலிய நூல்களை இயற்றியுள்ள போதிலும் ஆங்கில மொழிக்கு அவர் அளித்த அகராதி என்னும் அருங்கொடைக்காகவே அவர் ஆங்கிலேயர் நினைவில் நிறைந்து நிற்கின்றார்.

அவர் அளவில் அல்லது அவர் அன்றைக்கு வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இருக்கக்கூடிய எவரும் அத்தகைய அருஞ்சாதனை புரியமுடியாது. ஒரு புத்தக வியாபாரியின் மைந்தரான அவர் எப்போதும் வறுமையில் வாடியவர். வறுமை மட்டுமா, பிணியும் அவரை வாட்டியது. பார்வையிலும் பழுது, நரம்புப்பிறழ்ச்சித் தொல்லைவேறு. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பல்வேறு குழுக்கள் செய்த பணியைத் தாமே தனிஒருவராக எட்டு ஆண்டு (1747-1755) காலத்தில் செய்து முடித்து ஆங்கில மொழிக்குப் பெருமை சேர்த்தார்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/56&oldid=968516" இலிருந்து மீள்விக்கப்பட்டது