பக்கம்:முகவரிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவற்றை உடனுக்குடன் பாராட்டி ஊக்குவிக்கும் பரந்த மனமும், செயல்பாடும் கொண்ட மீராவின் ஆளுமையை, அவரது கவிதைகளைக் காட்டிலும், இம்முன்னுரைகள் நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

'இவன் என்ன கிழித்து விட்டான்?' 'அவன் என்ன எழுதிவிட்டான்?' 'நான் கம்பனைச் சாகடித்தேன்', 'பாரதிதாசன் காலை ஒடித்தேன்', என்று பேசித் திரியும் தமிழ்க் கவிஞர்களின் உலகில் மீரா ஓர் அபூர்வப் பறவை என்பதை இம்முன்னுரைகள் மெய்ப்பிக்கின்றன. தன்னைக்கூட தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை உயர்த்தும் பாராட்டும் பண்பு தமிழுலகில் அரிது; புதிது.

எந்த நூலுக்கு முன்னுரை எழுதினாலும், தன்னுடைய கருத்துக்களைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல், நூலாசிரியரின் கருத்துக்களோடு அன்புப்போர் தொடுக்கும் மீராவின் நடை நளினம் தமிழுக்கு நல்வரவு.

களவு நூலும், காவல் நூலும் கற்றுத்தேர்ந்த மதுரைக் காஞ்சிக் காவலர்களைப்போல், யாப்பதிகாரத்தை அதிகாரம் செய்ததுடன், புதுக்கவிதைப் புதையலும் எடுத்த மீரா, கவிதை நூல்களுக்குக் கொடுத்த முன்னுரைகள் நல்ல வாக்குமூலங்கள்.

இங்கே இந்நூலில், மீரா என்னும் பேராசிரியத்தனம் அற்ற ஒரு பேராசிரியரின் நகைச்சுவை உணர்வு மிக்க, நட்பின் அன்பு கனிந்த, ஒரு திறந்த மனம் பிரசன்னமாகிறது. அவரது ஆளுமை நம் அந்தராத்மாவில் இடம்பிடிக்கிறது.

இந்திரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/8&oldid=970844" இலிருந்து மீள்விக்கப்பட்டது