பக்கம்:முகவரிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணைப் பூ, மலர் என்று சொல்லிவிட்டால் போதுமாடி அந்தப் பூப்போல வேகமாக வாடி வதங்கினால்தானே பெண்ணுக்குப் பெருமை? ஒரு பெண் பூ பூப்படைந்த இரண்டே நாட்களுக்குள்ளேயே தன் அக்காள் கணவனின் கையால் கசக்கி எறியப்பட்டுக் கருகும் கதைதான் 'வாழ்ந்தது போதும்'.

பெரும்பாலும் பெண்களால் எழுதப்பட்ட இக்கதைகளில் வரக்கூடிய பெண்கள், சமூகத்தை எதிர்க்கத் தைரியமில்லா தவர்களாகத் தோன்றினாலும் இக்கதைகளைப் படிப்பவர் களின் நெஞ்சத்தில் ஓர் ஆவேசத்தையும் எதிர்க்க வேண்டு மென்ற ஓர் உக்கிரத்தையும் உண்டாக்கிவிடுகின்றனர்.

இதே தொகுதியில் 'மனச்சுளுக்கு' என்னும் கதையில் ஒரு கடைக்காரன் மறைவில் வைத்திருந்த சில மஞ்சள் புத்தகங்களை எடுத்து "லேட்டஸ்ட் அமெரிக்கன் புக்ஸ் ஸார்' என்று காட்டுகிறான். எங்கோ இருந்து ஆண்-பெண் உறவைக் கேவலப்படுத்தி டாலராக்கும் அமெரிக்க மஞ்சள் புத்தகங்களில் மனம் பறிகொடுக்கும் பச்சைத் தமிழ் இளைஞர்கள், நமக்கு மிகச் சமீபத்திலிருந்து நல்ல நல்ல இலக்கியங்களைத் தரும் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கொஞ்சம் கவனித்தால் என்ன?

முன்பொரு முறை தென்மொழி புத்தக டிரஸ்ட் ஆதரவில் வெளிவந்த தென்மொழிச் சிறுகதைத் தொகுதியில் சில தெலுங்குக் கதைகளும் இருந்தன. அவற்றைக் காட்டிலும் 'அடுத்த வீடு' தொகுதியில் உள்ள கதைகள் தரத்திலும் தமிழாக்கத்திலும் சிறந்து விளங்குகின்றன. நூலின் முதல் மூன்று நான்கு பக்கங்களைக் கடந்துவிட்டதும் மொழி பெயர்ப்பு என்பதே தெரியாத அளவுக்கு அவ்வளவு இயற்கையாக மொழிநடை அமைந்துள்ளது.

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/89&oldid=969609" இலிருந்து மீள்விக்கப்பட்டது