பக்கம்:முகவரிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலான காரணமாகச் சொல்லலாம். தமிழிலக்கிய இலக்கணங்களைக் கருத்தொன்றிப் பயின்றவர்கள் இம் மாற்றங்களை அறியாதிருக்க மாட்டார்கள். ஆசிரியத்தில் தொடங்கிய தமிழ்க்கவிதை வெண்பா, கலி, வஞ்சி என்னும் பா வகைகளோடு மட்டும் நின்றுவிட வில்லையே. துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவின வகைகளாக அது விரியவில்லையா? இவற்றில் எல்லாம் பாடிப்பாடிச்சலிப்புற்ற பிறகு அண்ணாமலை ரெட்டியார், திரிகூட ராசப்பக் கவிராயர், பாரதி, பாரதிதாசன் போன்ற வர்கள் தங்கள் கவித்துவத்துக்கும் கைவந்த ஆற்றலுக்கும் ஏற்பப் புதிய கவிதை வடிவங்களைப் படைத்துத் தமிழை வளப்படுத்தவில்லையா? இவையெல்லாம் தமிழிலக்கி யத்தில் இடம்பிடித்துக் கொள்ளவில்லையா?

இவற்றைப் போலவே கவிதைக் கடலின் புதிய அலைகளாகப் பிறந்து ஏனையவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னோடி வருகின்றன இரண்டு அலைகள். ஒன்று வசன கவிதை (Prose poem). இன்னொன்று கட்டற்ற கவிதை (Free verse).

இவ்விருவகைப் பிரிவுக்குள்ளும் அடங்கும் கவிதைகளை உள்ளடக்கமாகக் கொண்டு தமிழில் புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவ் வரிசையில் புதிதாக இடம்பெறும் நூல் இது.

தொல்காப்பியரும், அமிதசாகரரும் சொன்ன விதிப்படி எழுதுவதெல்லாம் எப்படிக் கவிதையாகி விடாதோ அதே மாதிரி மரபை மீறி எழுதுவதும் கவிதையாகிவிடாது. மரபை மீறினாலும் மீறாவிட்டாலும் கவிதைக்குரிய இலக்கணங்களை மீறாதிருக்க வேண்டும், அவ்வளவே. உயிர்த்துடிப்பும் உள்ளார்ந்த உணர்ச்சியுமுள்ள ஒரு பிறவிக் கவிஞன் மரபு மீறி வசனமாக எழுதினாலும் அல்லது மரபுக் குட்பட்டு அறுசீர் விருத்தம் எழுதினாலும் அதைப் படிக்க முடிகிறதே! என்ன காரணம்?

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/92&oldid=969611" இலிருந்து மீள்விக்கப்பட்டது