பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


4. முகத்தின் அமைப்பும் சிறப்பும்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள்.

சிரசு என்பது தலையாக மட்டும் அமையாமல், தலைமை பீடமாகவும், முதன்மைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றது.

தலையின் அமைப்பானது. ஏறத்தாழ 29 எலும்புகளால், உருவாக்கப்பட்டிருக்கிறது.

29 வித்தியாசமான எலும்புகளால், தலைப் பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. மூளையை பத்திரமாகப் பாதுகாக்கிற மூளைப் பெட்டியானது (Brain Box) 8 எலும்புகளாலும்; முகப் பகுதியானது 14 எலும்புகளாலும்; தாடைப் பகுதி 2 எலும்புகளாலும் ஒவ்வொரு காதுப் பகுதியும் 3 எலும்புகளாலும் ஆக்கப்பட்டிருப்பதாக, விஞ்ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

14 எலும்புகளாலும், 30 தசைத்துண்டுகளாலும், ஆக்கப்பட்டிருப்பதுதான் முகமாகும். அந்த 30 தசைத் துண்டுகளிலே, சில தசைத் துண்டுகள் ஒரு அங்குலத்திற்கும் சிறிய அளவிலே உள்ளன. ஒரு சிறு துண்டின் நீளமானது 2.5 செ. மீட்டருக்கும் குறைவாகக் கூட இருக்கிறது. இப்படிச் சிறு சிறு துண்டுகளாக முகத் தசைகள் இருப்பதால்தான், முகத்திலே ஏற்படுகிற அசைவுகள் யாவும் அக உணர்வுகளின் பாவங்களை, அருமையாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.